எமக்கு பக்கத்தில் எரிகுண்டு விழுந்தது – உயிர் தப்பி அகதியாக வந்த மக்கள் தெரிவிப்பு

வன்னியில் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்கள் மீது சிறீலங்கா படையினர் எரிகுண்டுகளையும் வீசிவரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்டு பின்னர் இடம்பெயர்ந்து வவுனியா சென்றுள்ள மக்களில் சிலர் பதிவின் செய்தியாளருக்கு தமக்கு நேர்ந்தவற்றை விபரித்துள்ளனர்.

எமக்கு அருகில் பாரிய வெடிப்புடன் பல எரிகுண்டுகள் வீழ்ந்து வெடித்தன. நம்மை சுற்றி தீப்பற்றி எரிந்தபோதும் நாம் அதிஸ்டவசமாக உயிர் தப்பினோம்.

நாம் இறுதி வரை அங்கிருக்கவே விரும்பினோம். ஆனால் கடந்த சில நாட்களாக சிறீலங்கா படையினரின் வானூர்திகள் மற்றும் தூரவீச்சு எறிகணைகள் மூலம் எரியும் தன்மை கொண்ட இரசாயனங்களை ஏவுகின்றனர்.

அவை வீழ்ந்த இடத்தில் இருந்து பல மீற்றர் தூரம் பற்றி எரிகின்றது. அருகில் உள்ள கொட்டகைகள் மற்றும் மரங்கள் எல்லாம் பற்றி எரிந்தன. நாம் பதுங்கு குழியில் இருந்தோம் எம்மை சூழவும் நெருப்பு, ஆனால் தெய்வாதீனமாக நாம் உயிர் தப்பிக் கொண்டோம்.

எமது கண் முன்னே பல குழந்தைகள் வயதானவர்கள் கருகி இறப்பதை கண்ட பின்னர் எங்கள் குழந்தைகளும் இவ்வாறு இறந்து விடுவார்கள் என்னும் அச்சம் காரணமாகவே நாம் மிகுந்த பயத்துடன் சிறீலங்காவின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தோம்.

நாம் புறப்பட்டு வரும்போது விடுதலைப்புலிகள் தடுத்ததாக கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தடுக்கவில்லை. மாறாக சிறீலங்கா படையினர் செய்யும் அட்டூழியங்கள் பற்றி சொன்னார்கள். ஆனால் எங்களை தடுக்கவில்லை.

அங்கு இன்னமும் மூன்று இலட்சம் வரையான மக்கள் இருக்கின்றார்கள். அவர்களின் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள். அவர்களில் பலர் என்ன நடந்தாலும் சிறீலங்கா படையினரின் பகுதிக்குள் வந்து அடிமையாய் இறக்க விரும்பாதவர்களாக காணப்படுகின்றார்கள்.

அதேநேரம் இன்னும் சில மக்கள் தங்களுடனும் தங்களுக்கு முன்னரும் சிறீலங்கா படைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அச்சம் காரணமாக வந்துள்ளதாகவும், அவர்களில் பலர் பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள இடம்பெயர்ந்துள்ள மக்கள், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது சிறீலங்கா படையினர் அவர்களை வதை முகாம்களுக்குள் சிறை வைத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : .pathivu.com

Leave a Reply

Your email address will not be published.