தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ‘அம்பி’ யார்? – தா.பாண்டியன் .

சென்னை: ஈழப் போரில் தமிழர்களை வீழ்த்த, அவர்களுக்கு துரோகம் செய்து வரும் இந்திய ‘அம்பி’ யார் என என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தா.பாண்டியன் அளித்த பேட்டி:

முதல்வர் கருணாநிதி கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வருகிற செய்திகள் தமிழினம் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையை அவருக்கும் தந்திருப்பதாக கூறியிருக்கிறார். ராஜபக்சேவுக்கு வேண்டுகோளும், சோனியா காந்திக்கு யோசனையும் கூறியிருக்கிறார்.

சோனியா காந்தி, இந்திரா காந்தி போல பேச வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படி சொல்லியிருப்பதிலிருந்தே சோனியா காந்தி, இந்திரா காந்தி போல பேசவில்லை என்பதை நயமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அலெக்சாண்டர் படையெடுத்து வந்த போது பஞ்சாப் போரில் போராடி பிடிக்கப்பட்ட புருசோத்தமன் என்கிற போரஸ் மன்னனை, உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டதற்கு நானும் ஒரு மன்னன். எனவே மன்னனாக மதிக்க வேண்டும் என்று கூறி, அப்படி மதிக்கப்பட்டான். இந்த கதையையும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

போரஸ் மன்னனை பிடிக்க வேண்டுமென்றால், ஜீலம் நதியை கடக்க வேண்டும். அலெக்சாண்டர் படை ஜீலம் நதியை கடக்க அம்பி என்பவன் உதவியுள்ளான். அந்த அம்பியும் இங்கிருந்த ஒரு மன்னன் தான். இப்போது இந்த பிரச்சினையில் இந்தியாவில் உள்ள அந்த அம்பி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சோனியா காந்தி, கருணாநிதி உள்பட 11 முதல் மந்திரிகளுக்கு விடுதலைப் புலிகள் குறிவைத்திருப்பதாக மத்திய உள்துறை கூறியது. அதற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து அதன் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், எங்களுக்கு சோனியா காந்தியையோ, கருணாநிதியையோ, இந்திய தலைவர்களையோ தாக்குகிற திட்டம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இலங்கை தமிழர்கள் மீது தமிழ் மக்கள் காட்டி வரும் அனுதாபத்தை திசை திருப்ப செய்யும் முயற்சி இது என்ற அந்த ஆத்திரத்தில் தான் வைகோ பேசியிருக்கிறார். இந்திய இறையாண்மைக்கு எதிராக தனிநாடு அமைப்போம் என்றோ, தலைவர்களை கொல்வோம் என்றோ அவர் பேசவில்லை. அப்படி பேசியிருந்தால், தடுத்திருப்போம், கண்டித்திருப்போம். இந்திய ஒருமைப்பாட்டை காப்பதில் எந்த தேச பக்தனுக்கும் பிந்தியவர்கள் அல்ல நாங்கள் என்றார் பாண்டியன்.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.