பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிகட்ட நடவடிக்கையில் இராணுவம்: இலங்கை பாதுகாப்பு அமைச்சு

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிய பகுதியில் விடுதலைப் புலிகளால் மனித கேடயமாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் மக்களை, விடுவிப்பதற்கான இறுதி மீட்பு நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அம்பலவன் பொக்கணைக்கு மேற்கேயும் புதுமாத்தளனுக்கு தெற்கேயும் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைகளில் இராணுவத்தினர் தமது நிலைகளை நடவடிக்கைகளுக்காக நகர்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மண் சுவர்களுக்கு 150 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், அங்கு அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக இலங்கை இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட மீட்பு நிலைகள் சில அமைந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வழிகளின் ஊடாக மக்களை வருமாறு கோரும் அறிவிப்புகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

அதேவேளை, இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சில மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

ஆனால், இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.