“‘விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம்’ என ஒன்று ஒருபோதும் வரப்போவதேயில்லை”: இந்திய இதழிடம் நடேசன் திட்டவட்டமாக தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலகட்டம் (Post-LTTE Scenario) என ஒன்று ஒருபோதுமே வரப்போவதில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், “இவ்வாறான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து – காலத்தை வீணடித்து, மனித உயிர்களை அழிக்காமல், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரித்து அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் கவனத்தைச் செலுத்துங்கள்” என உலக சமூகத்தையும், இந்தியாவையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘தெஹெல்கா’ இதழின் ஊடகவியலாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு பா.நடேசன் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario), என பல நோக்கர்கள் ஏற்கனவே கூறத் தொடங்கியிருப்பது பற்றி..?

இங்கு நான் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario) என்று ஒன்று இருக்கப்போவதேயில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய விடுதலைப் போராளிகள் என்ற முறையில், அவர்களது உரிமைகளை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் – கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமையேற்று நடாத்தி வருவதன் மூலமே இந்தப் பொறுப்பு நிலையை நாம் பெற்றிருக்கின்றோம்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இறுதியாக நாம் எதனை அடைகின்றோம் என்பதுதான் முக்கியமானது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் தமது கவனத்தைச் செலுத்துமாறு அனைத்துலக சமூகத்தையும் இந்தியாவையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்குப் பின்னான கால கட்டம் என ஒன்று ஒருபோதும் வரப்போவதில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு சிறிலங்காப் படைகள் முயற்சி செய்வதாக வெளியான செய்திகள் தொடர்பில் அவரின் (பிரபாகரனின்) பிரதிபலிப்புக்கள் எவ்வாறு உள்ளன?

இந்தச் செய்திகளைப் பார்த்து அவர் சிரிக்கின்றார்.

ஈழத்தை அடைய முடியும் என பிரபாகரன் இப்போதும் நம்புகின்றாரா?

அவர் அவ்வாறு நம்பவில்லை என்றால், இந்தப் போராட்டத்தை அவர் எப்போதோ கைவிட்டிருப்பார்.

விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிறிலங்கா படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?

சிறிலங்கா மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.

பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் என்பதையிட்டு உங்களுடைய பதில் என்ன?

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தம் மீது பிரயோகிக்கப்படுகின்றமை பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அந்த அரசாங்கத்தின் கைகளில் அகப்பட அவர்கள் விரும்பாத நிலையில் இங்கு வாழும் மக்களை போருக்குள் ‘சிக்குண்டவர்கள்’ என்றோ அல்லது ‘மனித கேடங்கள்’ என்றோ குறிப்பிடுவது பொருத்தமற்றது.

மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்தப் பகுதிக்கு வந்து மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.

போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றீர்கள். இது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால்தான் நாம் போர் நிறுத்தம் ஒன்றை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.

அனைத்துலக சமூகத்துக்கான உங்களுடைய கோரிக்கை என்ன?

அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார் மற்றும் பெரியவர்கள் சிறிலங்கா ஆயுதப் படைகளால் நாளாந்தம் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம். இந்த போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.