கடும் மழைக்கும் மத்தியிலும் படையினர் தாக்குதல்: இன்றும் (வெள்ளி) 292 பொதுமக்கள் படுகொலை; 350 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளபாதுகாப்பு வலயப் பகுதியில் கடுமையாக பெய்து வரும் மழைக்கும் மத்தியில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதலில் 292 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி முன்னேறுவதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் கடும் மழையினால் பாதிக்கப்பட்டு ஒதுங்க இடமில்லாத நிலையில் அல்லோகல்லோலப்படும் மக்கள் மீது எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 292 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடும் மழையினால் பதுங்குகுழிகளுக்குள் நீர் நிரம்பியதால் அவற்றுக்குள் காப்பு எடுக்க முடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே சிறிலங்கா படையினர் இவர்கள் மீது இரக்கமற்ற முறையில் எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

பள்ளமான பகுதிகளுக்குள் நீர் நிரம்பியதால் மேட்டு நிலங்களை நோக்கிச் சென்ற மக்கள் மீதும் சிறிலங்கா படையினர் ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்தினர்.

இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனைப் பகுதி மழையினால் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதனால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதன் காரணமாக காயமடைந்த பெருமளவிலான மக்கள் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் கடும் மழைக்கும் மத்தியில் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் மாத்தளன் மருத்துவமனை பகுதியை நோக்கி பெரும் தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு சிறிலங்கா படையினர் தயாராகி வருகின்றனர்.

இதற்காக அப்பகுதியை நோக்கி பேருந்துகளில் பெருமளவிலான படையினர் கொண்டுவந்து இறக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.