நெதர்லாந்தில் உண்ணாவிரதமிருந்த தமிழர்கள் கைது: தமிழ் மாணவர்கள் மீதும் காவற்துறையினர் தாக்குதல்

தாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் ஐந்தாவது நாளாக நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதுவரை போர் நிறுத்தப்படாமல் சிறீலங்கா அரசானது தொடர்ந்து இன்றும் வன்னியில் தமிழ்மக்கள்மீது தாக்குதல்களை நடாத்தியதில் 300இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதை அறிந்து இன்று மாலையிலிருந்து மூன்று தாய்மார், இரண்டு ஆண்கள் என ஐந்து பொதுமக்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், இதற்கு காவற்துறை அனுமதி மறுத்திருந்தது. உண்ணாவிரதம் இருந்தவர்களையும் அவர்களிற்கு ஆதரவாக போராட்டத்தினை நடாத்தியவர்களையும் கலைந்து போகுமாறும் இல்லையேல் கைது செய்வோம் எனவும் காவற்துறை எச்சரித்திருந்தது.

இருந்தும் எமது உறவுகள் மகிந்த அரசால் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகின்றபொழுது இதனை உடன் தடுத்து நிறுத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என காவற்துறைக்கு அறிவித்து போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்.

இதன்பின் அனைவரையும் சுற்றிவளைத்து காவற்துறையினர் கைது செய்தபொழுது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இக் கைதை எதிர்த்து கோசங்களை எழுப்பியபொழுது அம்மாணவர்களை காவற்துறையினர் தாக்கி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். முப்பது பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அனைத்துலகால் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை ஈராக் அரசு வைத்திருக்கின்றது என்று ஈராக் அரசு மீது போர்தொடுத்த இந்த அனைத்துலகமானது, அதே இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மகிந்த அரசானது தாயகத்தில் தமிழ் மக்களை தொடர்ச்சியாகப் படுகொலை செய்கின்றபொழுது அதைத் தடுத்து நிறுத்த விருப்பமில்லாமல் இப்படுகொலைகளை நிறுத்தச்சொல்லி அகிம்சை ரீதியில் போராட்டம் நடாத்தும் அப்பாவித் தமிழ் மக்களை கைது செய்வதும் தாக்குவதும் தமிழ்மக்களை மிகவும் மனவேதனைக்கு உட்படுத்தியுள்ளது.

மேலும், மனிதஉரிமைகளை வெறும் வார்த்தைகளில் பேசும் ஐரோப்பி யநாடுகள், வன்னியில் ஒட்டுமொத்தமாக தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படும்வரை நாட்களைக் கடத்தி , அதன்பின்பு ஏதோ தாங்களும் தமிழ்மக்களை காப்பாற்ற வருகின்ற ஜனநாயக நாடுகள்போல் பாசாங்கு செய்து தங்கள் நலன்களை கவனித்துக் கொள்ளப்போவதுதான் உண்மையெனவும் இவாகளிற்கு தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதில் அக்கறையில்லையெனவும் இவ்ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

எனவே, எந்த அந்நிய நாடுகளையும் நம்பியிராமல், தமிழ்மக்களை கொன்றொழிக்கின்ற சிங்கள இராணுவத்தை முழுமுச்சுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் திருப்பித்தாக்கி தமிழர்களின் வரலாற்று ரீதியான நிலங்களை மீட்டெடுத்து தமிழீழத்தை நிறுவுவதே ஒட்டுமொத்த தமிழ்மக்கள் முன்னால் உள்ள ஒரேயொருவழியெனவும் இதற்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களுடைய முழுஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் தங்கள் கருத்துக்களை மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.