புத்தாண்டு, மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தென்பகுதி பாதுகாப்பு அதிகரிப்பு: தடுப்புக் காவலில் 250 தமிழர்கள்

புத்தாண்டு மற்றும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறிலங்காவின் தென்பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது கடந்த இரண்டு நாட்களில் 250-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுவருட கொண்டாட்டங்களில் மக்கள் கவனமாக உள்ள இருந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதல்களையிட்டு பொதுமக்கள் வழிப்பாக இருப்பது அவசியம் என காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் எச்சரித்திருக்கின்றார்.

அடுத்த வாரம், தமிழ் – சிங்களப் புதுவருடம் கொண்டாடப்படவிருக்கின்றது. இதனைவிட மேல் மாகாண சபைக்கான தேர்தலும் இம்மாத இறுதிப் பகுதியில் நடைபெறவிருக்கின்றது.

இவை இரண்டையும் பயன்படுத்தி தாக்குதல் நடவடிக்கைகள் தென்பகுதியில் மேற்கொள்ளப்படலாம் என்பதால் பொதுமக்கள் வழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறைப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

புதுவருடக் கொண்டாட்டங்களில் மக்களுடைய கவனம் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதால் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை மக்களை எச்சரித்திருக்கின்றது.

கடந்த சில மாத காலத்தில் மட்டும் 16 தற்கொலைக் குண்டுதாரிகள் தலைநகருக்குள் ஊடுருவியிருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக காவல்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

புதுவருடக் கொண்டாட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பெருமளவில் கூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

அத்துடன் புதுவருட நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல்துறை அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுவருட நிகழ்வுகள் மற்றும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிலும், அமைச்சர்கள் எவரையும் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுளளது.

இதேவேளையில் மேல்மாகாணத்தில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது 250-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா நகரிலும் அதனையடுத்துள்ள பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினரும் முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 219 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் கூறப்படுகின்றது.

கொழும்பில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் இவர்கள், தமது அடையாளங்களை சரியான முறையில் நிரூபிக்கத் தவறியதாலேயே தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளையில் கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை மற்றும் நாரேஹேன்பிட்டி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 250-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.