லிபியாவுடன் சிறிலங்கா மூன்று உடன்படிக்கைகள்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு லிபியாவிற்குச் சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் லிபிய அரசாங்கத்துடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

1. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்,
2. இயந்திரவியலாளர்களை பரிமாறிக்கொள்ளல்,
3. பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறைகளை மேம்படுத்தல்

ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று ஒப்பந்தங்களே இருதரப்பிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

லிபியா பிரதமர் காரியாலயத்தில் லிபிய பிரதமர் பேராசிரியர் அல் படாடி அலி அல் மஹ்முதியுடன் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதற்குப் பின்னரே இந்த மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பு தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினருக்கும், லிபிய பிரதமர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

லிபியாவில் இலங்கையர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் விசேடமாக சுகாதார துறையில் வைத்தியர்கள், தாதியர்களுக்கான தெழில்வாய்ப்புகள், நிர்மாண மற்றும் தெழில்நுட்பத் துறைகளில் கூடியளவான தொழிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் லிபிய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், இலங்கையில் தொலைத்தொடர்பு வதிகளை மேம்படுத்தல் ஆகிய வேலைத்திட்டங்களுக்கு லிபிய அரசாங்கம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கும், வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இணங்கியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் லிபிய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அந்நாட்டுப் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கான துறைகள் தொடர்பில் அங்குள்ள முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.சுற்றுலாத்துறை, தொலைத்தொடர்புகளை மேம்படுத்தல் ஆகிய துறைகளில் காணப்படும் முதலீடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சந்திப்புக்களிலும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் வெளிவிவகார ஒருங்கிணைப்பாளர் சஜித்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Source & Thanks : sankathi.

Leave a Reply

Your email address will not be published.