பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 234 கோடி செலவு!

மும்பை: பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட பயணங்களுக்காக இதுவரை ரூ. 234 கோடி செலவிடப்பட்டுள்ளதாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரமதரின் பயணத்திற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டுள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

சேத்தன் கோத்தாரி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூம் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே 1999 முதல் 2003 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 185.60 கோடியாகும்.

அதேசமயம், அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் செய்த வெளிநாட்டு சுற்றுப்பயண செலவுடன் ஒப்பிடுகையில், மன்மோகன் சிங்குக்கான செலவு மிகவும் சிறியது என்பது மட்டுமே இதில் ஆறுதலான விஷயம்.

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரேசில், கியூபா ஆகிய நாடுகளில் எட்டு நாள் பயணம் மேற்கொண்டார் மன்மோகன் சிங். அதற்கான செலவு ரூ. 15.89 கோடியாகும். இதுதான் பிரதமரின் பயணங்களிலேயே அதிகம் செலவிடப்பட்ட சுற்றுப்பயணமாகும்.

அதேபோல 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏழு நாள் சுற்றுப்பயணம் செய்தபோது ரூ. 13.4 கோடி செலவானது.

இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் எட்டு நாள் பயணம் மேற்கொண்டபோது ரூ. 11.9 கோடி செலவானது.

பிரதமரின் பயணங்களின்போது அவரது குடும்பத்தினரும் உடன் சென்றதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் அலுவலகத்தில் செய்யப்பட்ட ஹாட்லைன் வசதி, பிற தகவல் தொடர்பு வசதிகளுக்காக ரூ. 5.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர பயணப் படி மற்றும் ஹோட்டல் செலவுகள் மட்டும் ரூ. 1.21 கோடியாகும்.

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் டாக்காவுக்கு 3 நாள் போன செலவு ரூ. 3.70 கோடியாம். அதே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஆன செலவு ரூ. 6.80 கோடியாகும்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.