இந்திய உருக்கு பயன்படுத்த ஒபாமா மாநிலத்தில் எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொந்த மாநிலனமான இல்லினோசில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருக்கு பொருட்களை பயன்படுத்துவதற்கு, நூற்றுக்கணக்கான அமெரிக்கா உருக்காலை தொழிலாளர்கள் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகளின் அரசுகள் ஈடுபட்டுள்ளன.

இந்த போக்கிற்கு இந்தியா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு, முதலீட்டு சுதந்திரம் போன்றவைகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறி வளரும் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஏப்ரல் 2-3 ஆம் தேதிகளில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த நாடும் ஈடுபடக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் சொந்த மாநிலமான இல்லினோசில், இந்திய உருக்குகிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இல்லினோஸ் மாநிலத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்கான குழாய் பதிக்கும் வேலை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருக்கு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு அமெரிக்க உருக்காலை தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

யுனைடெட் ஸ்டீல் ஒர்க்கர்ஸ் என்ற தொழிற்சங்க அமைப்பைச் சேர்ந்த அமெரிக்க உருக்காலை தொழிலாளர்கள் ஆயிரம் பேர் நேற்று, இந்திய உருக்கு பொருட்களை பயன்படுத்துவதற்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கனடாவுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையே 2 ஆயிரம் மைல் அமைக்கப்படும் பெட்ரோலிய எண்ணெய் குழாய் அமைக்கும் பணிக்கு அமெரிக்க பொருட்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கூறி, அமெரிக்க பொருட்களையே வாங்கு என்று கோஷமிட்டனர்.

அமெரிக்காவில் சமீபத்தில் சீனாவின் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. நேற்று முதன்முறையாக இந்தியாவின் தயாரிப்பை குறிவைத்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த எண்ணெய் குழாய் அமைப்பதற்கு இந்தியாவில் தயாரான உருக்கு குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க பொருட்களையே வாங்கு, அமெரிக்க உற்பத்தி துறையை சீரமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அமெரிக்க அரசு கடைபிடிக்கும் கொள்கையால், (தாராள இறக்குமதி, உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், சுதந்திர வர்த்தகம்) அமெரிக்க பொருளாதாரத்திற்கு அடித்தளமாக உள்ள தொழில் துறை சீர்குலைகின்றது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை பறிபோகின்றது. இந்த கொள்கைகளை அமெரிக்க அரசு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அமெரிக்க அரசு, நஷ்டமடைந்துள்ள, நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிறுவனங்களுக்கு அரசு கஜானாவில் இருந்து உதவி செய்யும் போது, அவை அமெரிக்க தயாரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஒபாமா நிர்வாகம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.