விழுப்புரம் அருகே துப்பாக்கியால் சுட்டவன் பீகார் மாநில போலீசாரால் சுட்டுக்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவனை, பீகார் மாநில போலீசார் சுட்டுக் கொன்றனர்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் தேவநாதன்(24). இவர் கடந்த பிப்., 3ம் தேதி விழுப்புரம் ராகவன்பேட்டை அருகே பைக்கில் வந்த போது மூன்று பேர் இவரிடம் பைக்கை கேட்டனர். தர மறுத்ததால் கைதுப்பாக்கியால் சுட்டனர். படுகாயமடைந்த தேவநாதன் புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளைத் தேடினர்.டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் கஸ்பா காவல் நிலையம் கர்ப்பனேலியைச் சேர்ந்த நவீன்குமார்யாதவ்(23) ராஜ்குமார்(30) அமித்சொர்ணாகா(22) ஆகிய மூவர் தான் என்பது தெரியவந்தது. இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பீகார் சென்றனர்.

இதனிடையே கடந்த 23ம் தேதி பீகார் மாநிலம் கிஷன்கஞ்சி மாவட்டம் குச்சாதானந் காவல் நிலையத்திற்குட்பட்ட சவுத்விஷன்பூர் மார்க்கெட்டில் சுபான், அதீஸ், அரவிந், சிண்டுபகத், பிகாஷ் யாதவ் நான்கு பேரும் கொள்ளையடித்தனர். இதில், பிகாஷ் யாதவ்வை பொதுமக்களே அடித்துக் கொன்றனர். மற்ற மூவரும் தப்பியோடினர். இதனையறிந்த அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கிருந்த நவீன்குமார்யாதவை பிடிக்க முயன்றனர். போலீசாரை அவன் சுட்டதால் போலீசார் திருப்பி சுட்டதில் நவீன்குமார்யாதவ் இறந்தான். நவீன்குமார்யாதவ் இறந்த இடத்தில் 315 போல் ரக ரிவால்வர் இரண்டும், தோட்டாக்கள் இரண்டும் இருந்தன. இது குறித்து, விழுப்புரம் தனிப்படை போலீசாருக்கு தெரிவித்ததுடன் ராஜ்குமார், அமித் குமாரை பிடிக்க உதவுவதாகவும் உறுதியளித்தனர். இதனால் இருவரைம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.