அடுத்த தாக்குதலுக்கு பொட்டு அம்மான் தயார்: 2,800 அப்பாவிகள் பலி

கொழும்பு: விடுதலைப் புலிகளின் அனைத்து படைப் பிரிவினரையும் சண்டை நடக்கும் முன்வரிசை பகுதிக்கு செல்லும்படி, அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பாதுகாப்புப் பகுதி அருகே இலங்கை ராணுவம் நிலை கொண்டுள்ளதை அடுத்து, விடுதலைப் புலிகள் உஷாரடைந்துள்ளனர். பாதுகாப்புப் பகுதியில் பதுங்கு குழிகள் அமைப்பது உள்ளிட்ட தற்காப்பு பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். இந்த பணியில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், அந்த அமைப்பின் காவல் துறை தலைவர் இளங்கோவுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, அனைத்து படைப் பிரிவுகளையும் சண்டை நடக்கும் பகுதியை நோக்கி செல்லும்படி அவர் உத்தரவிட்டுள்ளார். விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், தற்போது பொட்டு அம்மான் தற்காலிகமாக தங்கள் படையினருக்கு தலைமை ஏற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல், புலிகளின் ராணுவ படைப் பிரிவுக்கு வேலவன் தலைமை ஏற்றுள்ளார். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

60 அப்பாவி மக்கள் பலி: முல்லைத் தீவில் உள்ள சுகாதார மையத்தில் வரதராஜன் என்ற டாக்டர் பணிபுரிந்து வருகிறார். இவர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கடந்த இரண்டு நாட்களாக இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்புப் பகுதியென அறிவிக்கப்பட்ட இடத்திற்குள் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 60 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ராணுவம் நடத்திய தாக்குதலில், அம்பலவான்பொக்கனை என்ற இடத்தில் இருந்த சுகாதார மையம் சேதமடைந்தது. இது தவிர, மேலும் ஒரு சுகாதார மையத்தின் மீதும் ராணுவம் குண்டு வீசியது. தங்கள் குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்குவதற்காக பொதுமக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வீச்சில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் ஒருவரும் உயிரிழந்தார். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தான் குண்டு வீசப்பட்டது. இவ்வாறு வரதராஜன் கூறியுள்ளார்.

இந்த தகவலை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. “பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. புலிகளிடம் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதன் காரணமாக அந்த டாக்டர் இது போன்ற தகவலை தெரிவித்திருக்கலாம்’ என, ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா தெரிவித்துள்ளார். ஐ.நா., தரப்பில், “கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 2,800 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்; 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பொதுமக்களுக்கு புலிகள் அனுமதி மறுக்கின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வலியுறுத்தல்: இலங்கை நிலவரம் குறித்து அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான துணை அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் ஆகியோர் கலந்துரையாடினர். இதற்கு பின் அவர்கள் கூறுகையில், “பாதுகாப்பு பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி அளிக்க வேண்டும். இலங்கை ராணுவமும், புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்’ என்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.