சிபிஎம் தொண்டர்களால் அழகிரி உயிருக்கு ஆபத்து-குப்தாவிடம் திமுக புகார்

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் திமுக வேட்பாளர் மு.க.அழகிரி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம், திமுகவினர் மனு கொடுத்துள்ளனர்.

மதுரை தேர்தல் களம் இப்போதே சூடாகத் தொடங்கி விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் மு.க.அழகிரி உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுவதாக சில நாட்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி கவலை தெரிவித்திருந்தார்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழகிரியின் செயல்களைப் பட்டியலிட்டு பதிலடி கொடுத்திருந்தது.

இந்த நிலையில் மதுரை திமுகவினர், நேற்று மதுரை வந்த நரேஷ்குப்தாவை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அழகிரி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி புகார் கொடுத்தனர்.

தேர்தல் பணிகள் குறித்து 18 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மதுரை வந்தார்.

கருப்பு போஸ்டர்கள்..:

அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அவரை மதுரை பாராளுமன்ற திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6ம் தேதி மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் தேர்தல் விதிகளை மீறி திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயக படுகொலை செய்வதாகவும் அதை கண்டித்து மதுரை மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் 6ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக இடதுசாரி கட்சிகள், பாமக, தேசிய லீக், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்து திமுகவினர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய அன்று மாலை தான் திமுக வேட்பாளர் மதுரை வந்து சேர்ந்தார்.

திமுக வேட்பாளர் பட்டியல் 5ம் தேதி வெளியிடப்பட்டது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மதுரை வந்து சேரும் முன்னரே மதுரை முழுவதும் ஆர்ப்பாட்டத்துக்கான போஸ்டர்களை ஒட்டி, ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார்கள்.

இதனை வாக்காளர்களை தவறான வழியில் திசை திருப்புவதற்கான குற்ற முயற்சியாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அவர்களது தோழமை கட்சிகளும் திட்டமிட்டு தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் குற்றம் வாய்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்கள்.

அவர்கள் எத்தகைய குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அவர்கள் எங்கள் வேட்பாளர் மு.க.அழகிரியின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக் கூடிய தீவிர நடவடிக்கையில் ஈடுபடலாம் என்றும் நினைக்கிறோம்.

எனவே இந்த புகார் மனுவுடன் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களையும் பரிசீலனை செய்து தவறு செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுத்து நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.