இணைத்தலைமை நாடுகளை அவசரமாக கூட்டி நடவடிக்கை எடுங்கள்: நோர்வேயிடம் தமிழர்கள் கோரிக்கை

இணைத்தலைமை நாடுகளை அவசரமாகக் கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு நோர்வே அரசாங்கத்திடம் அங்கு வாழும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

நோர்வே பிரதமரின் அலுவலக வளாகத்தில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து நேற்று பிற்பகல் 4:00 மணி வரையான 30 மணித்தியாலங்கள் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போதே நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளிடம் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உறுதியான நிலைப்பாட்டின் விளைவாக, நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றைமோன்ட் ஜோஹான்சன் மற்றும், இலங்கைக்கான சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற பிரதமரின் அலுவலக வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அங்கு வரவழைக்கப்பட்ட பிரதிநிதிகள் ஊடாக நோர்வே அரசாங்கத்தை நோக்கி மூன்று அவசர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

– அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய இணைத்தலைமை நாடுகள் அவசரமாக கூட்டப்பட்டு, சிறிலங்கா அரசாங்கத்தை உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வைக்க வேண்டும்

– அனைத்துலக கண்காணிப்பாளர்கள் போர்ப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்

– உணவு, மருந்து மற்றும் மருத்துவப் பணியாளர்கள் போர்ப் பிரதேசத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும்

இணைத்தலைமை நாடுகள் கூட்டப்படாது போயின் அல்லது இக்கோரிக்கைகள் தொடர்பான முன்னற்றகரமான முடிவுகள் எடுக்கப்படாது போயின், அடுத்தகட்டப் போராட்டங்கள் தொடரும் எனவும் போராட்டத்தை வழிநடத்திய இளையோரும் மக்களும் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தை வழிநடத்திய இளையோர்களால் நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளை நோக்கி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதோடு, நோர்வேயின் நிலைப்பாடு தொடர்பாகவும், பக்கச்சார்பான அணுகுமுறை தொடர்பாகவும் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

இருதரப்பும் போரைத் தெரிவு செய்துள்ள புறநிலையில், தம்மால் பெரிதாக எதையும் செய்துவிட முடியாது என்ற கருத்தினை றைமேபன்ட் ஜோஹான்சன் முன்வைத்தார்.

நோர்வே தொடர்ச்சியாக இக்கருத்தினை முன்வைத்து வருவதற்கு விசனம் தெரிவித்த மக்கள், நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்குரிய பகிரங்க அழைப்பினை விடுதலைப் புலிகள் அண்மையில் இரு தடவைகள் விடுத்திருந்தமையைச் சுட்டிக்காட்டினர்.

எனவே இரு தரப்பு என்ற கருத்து தவறானது எனவும் போர் நிறுத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கியதாக தெளிவான அழுத்தங்களை நோர்வேயும் அனைத்துலக நாடுகளும் முன்வைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை உட்பட்ட நோர்வேயின் நிலைப்பாடுகள், அணுகுமுறைகளும் நடுநிலையான மூன்றாம் தரப்பு என்ற நோர்வேயின் வகிபாகத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது என்ற கண்டனமும் நோர்வேயை நோக்கி முன்வைக்கப்பட்டது.

பிரதி வெளிவிவகார அமைச்சர் றைமோண்ட் ஜோஹான்சன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் விரக்தி நிலையையும், அவர்களின் கவனயீர்ப்பு போராட்ட வெளிப்பாட்டையும் தாம் புரிந்து கொள்வதாக தெரிவித்தார்.

பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நோர்வேயில் வாழும் தமிழ் மக்களின் குடும்ப உறவினர்கள் போர் நடைபெறும், மிகக் குறுகிய பிரதேசத்திற்குள் பாதுகாப்பற்ற சூழலுக்குள் சிக்குண்டுள்ளனர். எண்ணிப் பார்க்க முடியாத மனித அவலங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அவல நிலையை நிறுத்துவதற்கு எமது சக்திக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஏனைய உலக நாடுகளுடன் இன்றைய நெருக்கடி தொடர்பாக பேச்சுக்களை நடாத்தி வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

நோர்வேயின் அனைத்து ஊடகங்களினது கவனக் குவிப்பினைப் பெற்றதோடு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்கள் பல இக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை நேரடி ஒளி-ஒலிபரப்பு செய்திருந்தமையும் சுட்டிக் காட்டத்தக்கதாகும்.

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இளையோர்கள், பெண்கள் உண்ணாநிலைப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்துக்கதாகும்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.