விமரிசையாய் நடந்த மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று படுவிமரிசையாக நடந்தது.

மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் திருப்பணி நடந்தது.

ரூ.12 கோடி செல்வில் கோவில் கோபுரங்கள், சன்னதிகள், பிரகாரங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. 2ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக வடக்கு ஆடி வீதியில் 180 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டது.

நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜை நடந்துத. நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் அக்னி வளர்த்து மந்திரங்கள் ஓதினர்.

கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர், கூடல் குமரர், வன்னி மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, நவக்கிரகங்கள், பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள் ஆகிய சுவாமி சிலைகளுக்கு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

நேற்று காலை யாகசாலை பூஜை நடந்தது. இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இருந்து விசேஷ சாந்தி பூஜை நடத்தி சிவாச்சாரியார்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் யாகசாலையில் விநாயகர் பூஜை, புண்ணியவாகன பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சூரியபூஜை, பிரதான கும்ப பூஜை போன்ற பூஜைகளை நடத்தினர். பின்னர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்களுக்கு காப்பு கட்டப்பட்டது.

இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் 4 ராஜகோபுரங்கள் உள்பட 12 கோபுரங்களுக்கு எடுத்துச் சென்று கலசங்களுக்கு பூஜை நடத்தினர்.

அதை தெடார்ந்து 9.17க்கு மீனாட்சி அம்மனுக்கு மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்கள் மீது ஏழு நதிகளின் புண்ணிய தீர்த்தங்கள தெளிக்கப்பட்டது. பின்னர் அது பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

இதன் பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம் காரணமாக மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த 26ம் தேதி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாக சாலை பூஜைகளில் பங்கெடுத்து வந்தனர்.

இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் கூடியுள்ளனர். இதையொட்டி மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.