கடத்தப்பட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் விடுதலை

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இரு வாரங்களுக்கு முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் அவரை கொழும்பு, வெள்ளவத்தப் பகுதியில் வான் ஒன்றில் கொண்டு வந்து நேற்று புதன்கிழமை இரவு இரவு 9:30 நிமிடமளவில் விடுதலை செய்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அங்கிருந்து அவர் தனது உறவினர்களுடன் தொடர்புகொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரவீந்திரன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து கடந்த இரண்டு வார காலமாக மேற்கொண்டு வந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தினை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைவிட்டுள்ளதாக இன்று காலை அறிவித்திருக்கின்றனர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரான இவர், மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை மாதிவெலவில் உள்ள தனது சகோதரரின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கியிருந்து மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் நாள், தனது உந்துருளியில் பல்கலைக்கழகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, காவல்துறை சீருடையில் வெள்ளை வானில் வந்த ஆயுதக்குழு ஒன்றினால் இவர் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.