பிரபாகரன் உடல்நிலை மோசம்:பொட்டு அம்மன் தலைமையில் புலிகள்-இலங்கை

கொழும்பு: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவருக்கு பதிலாக பொட்டு அம்மான் முழு பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவம் விடுதலை புலிகளின் மீது தாக்குதல் என்ற பெயரால் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. போர் நடக்கும் இடங்களில் மட்டுமில்லாமல், பாதுகாப்பு பகுதிகளிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தி்ல் விடுதலை புலிகள் வசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அந்த பகுதிகளை ராணுவம் பாதுகாப்பு பகுதியாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மோசமான உடல் நிலை காரணமாக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு பகுதியில் தஞ்சம் புகுந்திருப்பதாக இலங்கை ராணுவம் செய்திகள் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் செய்தி குறிப்பு ஒன்றில்,

பிரபாகரன் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் படையை முன்போல் வழிநடத்த முடியவில்லை. இதனால் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான் என்ற சண்முகலிங்கம் சிவசங்கரன் தான் தற்போது புலிகள் அமைப்பின் முழு செயல்பாட்டையும் கண்காணித்து வருகிறார்.

நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 26 விடுதலை புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்.

பல முறை பிரபாகரன் இறந்துவிட்டதாக வதந்திகளை பரப்பிவிட்ட இலங்கை ராணுவத்தின் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.