பிரபாகரன் சரண் வாய்ப்பே கிடையாது: இலங்கை பத்திரிகை தகவல்

கொழும்பு: “ராஜிவ் கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற காரணத்தால், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்திடம் சரணடைய மாட்டார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறியதாக “பாட்டம் லைன்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புலிகள் வசம் எஞ்சியிருந்த புதுக்குடியிருப்பு பகுதியையும் ராணுவம் முழுமையாக கைப் பற்றி விட்டது. ஏராளமான புலிகள் கொல்லப்பட்டு விட்டனர். புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் இந்த சண்டையில் பலியாகி விட்டனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு பகுதி என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் பதுங்கியுள்ளனர். அங்கு, பொதுமக்களை மனித கேடயமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு பகுதிக்குள் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், புலிகள் தலைவர் பிரபாகரன் நிலை என்ன என்பது குறித்து பல்வேறு விதமாகப் பேசப்படுகிறது. அவருக்கு பலமான பின்புலம் இருப்பதால், தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை. ராஜிவ் கொலை வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு கடத்தப் படலாம் என்ற காரணத்தால், அவர் ராணுவத்திடம் சரண் அடைவதற்கும் வாய்ப்பில்லை. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி ராணுவத்திடம் வீழ்ந்ததில் இருந்து, பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த எவரும் கடல் வழியாக தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக, கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத் தீவு கடல் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அதிவிரைவுப் படகுகள், தாக்குதல் படகுகள், ரேடார் போன்றவற்றின் உதவியுடன் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடல் பகுதியில், நான்கு பாதுகாப்பு வளையங்களை கடற்படையினர் அமைத்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லண்டனில் தொடர்ந்து போராட்டம்: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, ஏராளமான தமிழர்கள் மூன்றாவது நாளாக நேற்றும் லண்டனில் போராட்டம் நடத்தினர். 300க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பிரிட்டன் போலீசார் கூறுகையில், “போராட்டத்தில் பங்கேற்ற வர்களின் எண்ணிக்கை நேற்று குறைவாகவே இருந்தது. இதனால், போராட்டம் அமைதியாக நடந்தது. பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர்’ என்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.