எமது படையினரை குறை கூற பிரித்தானிய அமைச்சருக்கு எந்த உரிமையும் இல்லை: சாடுகின்றார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

சிறிலங்கா படையினர் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் எனச் சொல்வதற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பான்ட்டுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என கடுமையாகச் சாடியுள்ளார் சிறிலங்காவின் சுற்றாடல் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் ஆலோசகருமான சம்பிக்க ரணவக்க.

கடந்த காலங்களில் பிரிதித்தானிய செய்துள்ள போர்க் குற்றங்களைப் பார்க்கும் போது எமது விவகாரத்தில் தலையிட்டு எமது இராணுவத்தைக் குறை சொல்வதற்கு பிரத்தானிய அமைச்சருக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் சம்பிக்க தெரிவித்திருக்கின்றார்.

1982 ஆம் ஆண்டில் ஆர்ஜன்ரீனாவுக்குள் தலையிட பிரித்தானியா 3,000 ஆர்ஜன்ரீனியர்களைப் படுகொலை செய்தது. இந்த போர்க் கொடுமைகளுக்காக பிரித்தானியா இன்று வரையில் தமது கவலையைத் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பெருந்தொகையானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுள்ள ஒரு நிலையில் போரை நிறுத்துமாறு பிரிதானியாவும், அமெரிக்காவும் எமக்கு அறிவுரைகளைக் கூறுவது ஒரு அனைத்துலக நகைச்சுவை எனவும் அவர் தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டில் இந்தியா செய்ததைப் போலவே, அனைத்துலக சமூகம் இப்போது எமது பிரச்சினையில் தலையிடுவதற்கு முனைகின்றது எனக் குறிப்பிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அவர்களைத் தோற்கடிப்பதற்காக நாம் எம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினையில் இடம்பெறக்கூடிய எந்த ஒரு அனைத்துலகத் தலையீடும், அவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் இரத்தத்தை தமது கைகளில் பூசிக்கொள்வதாகவே அமைந்திருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.