படையினரின் வெற்றியில் குளிர்காயும் அரசாங்கமும் அரச தலைவரும்: ஐ.தே.க. குற்றச்சாட்டு

போர் வெற்றியை அரசு தனது சாதனையாகக் காட்டி சுய அரசியல் இலாபம் ஈட்ட முனைகின்றது எனத் தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, படையினரது வெற்றியில் அரசாங்கமும், அர தலைவரும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியிருக்கின்றது.


வடக்கில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கும் அரசாங்கம் தெற்கில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது எனவும் ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சரும் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் உள்ள ஐ.தே.க.வின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் காரணமாக சிறுபான்மையின மக்கள் அச்சத்துடனேயே வாழும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்ட அவர், தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

“பயங்கரவாதம் எந்தக் கோணத்தில் இருந்து வந்தாலும் அதனை முறியடிக்க வேண்டும் என்பதில் எமக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. ஆளும் கட்சியைப் போலவே, ஜே.வி.பி.யும் நாமும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கின்றோம்.

இருந்த போதிலும் அரசாங்கம் போர் வெற்றியைத் தன்னுடைய சாதனையாகக் காட்டி அரசியல் இலாபம் ஈட்ட முற்படுகின்றது. எமது படையினரின் வெற்றியில் அரசாங்கமும் அரச தலைவரும் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த போர் வெற்றியைக் காட்டிக்கொண்டு அரசாங்கம் தென்பகுதியில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் பெரும் அச்சமடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் கூட தாக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். ஆசிரியர்கள் கூட இவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றனர்.

களுத்துறை மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 17 மர ஆலைகள் மூடப்பட்டு விட்டன.

தென்பகுதியில் மறைமுகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காட்டுத்தர்பார் அரசியலுக்கு நாம் இடமளிக்கக்கூடாது.

காலத்துக்குக் காலம் இந்த நாட்டில் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. இப்போது கூட ஆளும் கட்சியில் இணைந்துள்ள பல கட்சிகள் இனவாதத்தையே தமது அரசியலாகக் கொண்டு பெரும்பான்மையின மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.

இந்த இனவாதத் தீணைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கோரிக்கை விடுத்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.