மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது: ஜெயலலிதா

மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் இலங்கைத் தமிழர்களுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத் தப்பட்டிருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் செல்வி ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களை அழிக்க இந்திய அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் நவீன சாதனங்கள் அனுப்பியதையும், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளித்ததையும் வேடிக்கை பார்த்தவர் முதலமைச்சர் கருணாநிதி. தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை தட்டிக் கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் இலங்கைத் தமிழர்களுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத்தப்பட்டிருக்கும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழ் இனமே இன்று இலங்கையில் அழிந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் 2 இலட்சம் தமிழர்கள் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி வளைத்து சிங்கள இராணுவம் நச்சுக் குண்டுகளை வீசுவதாகவும், நந்திக்கடல் பகுதிக்கு மேற்கே உள்ள பகுதியை இலங்கை இராணுவம் சுற்றி வளைத்து விட்டதாகவும், இந்தப் பகுதியின் மீது சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தினால் மேலும் 3 இலட்சம் தமிழர்களின் உயிருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தச் சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவம் நடத்தும் கோரத் தாக்குதலைக் கண்டித்து இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, நோர்வே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் போராட்டங்களில் ஈடுபட்டு, தமிழர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இலங்கைத் தமிழர்களை காக்க உள்ள ஒரே வழி உடனடி போர் நிறுத்தம்தான். அதைத் தவிர வேறு வழியில்லை. தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி அங்கு உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கெள்கிறேன்.

இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.