புலிகளால் ஆபத்து ஏற்படலாம்- சோனியா, பிரியங்கா, ராகுல் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஆபத்து ஏற்படலாம் என்ற பீதியால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளது மத்திய உள்துறை. இவர்கள் தென் மாநிலங்களுக்கு பிரசாரத்திற்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு மாநில டிஜிபிக்களையும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் இந்த உத்தரவு போயுள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் பிரசாரத்திற்கு வரும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாலை மார்க்கமாக சோனியா குடும்பத்தினர் செய்யத் திட்டமிட்டிருந்த பிரசாரத்தை உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் காங்கிரஸ் குறைத்துக் கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோதுதான் சோனியாவின் கணவர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலியானார் என்பது நினைவிருக்கலாம்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.