ஈழத்தமிழர் மீதான நச்சுக்குண்டு தாக்குதலை நடத்தும் இந்திய சிங்கள அரசைக்கண்டித்து தமிழகத்திலும் புதுவையிலும் போராட்டங்கள்

ஈழத்தமிழர்கள் மீது தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வீசும் இந்திய சிங்கள கூட்டு தமிழின அழிப்பைக்கண்டித்து தமிழ்நாட்டிலும் , புதுச்சேரியிலும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

புதுச்சேரியில்

களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று,திணறும் சிங்கள ராணுவம்,வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது.  சிறீலங்காவின் கொடூரத் திட்டத்திற்கு உதவியாக, இந்தியாவும் நேரடியாக இரசாயன விச வாயு குண்டுகளை வழங்கியுள்ளது. இரசாயன விச வாயு குண்டுகளை வீசி தமிழினப் படுகொலையை நடத்தும் இந்திய,இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியை கண்டித்து புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல்- 07 ந் திகதி காலை 11மணியளவில் புதுவை மாநகரின் மய்யப் பகுதியான அண்ணாசிலையருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சில மணி நேர இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், 100 க்கும் மேற்பட்ட பெரியார் தி.கவினர் கலந்துக்கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில பெரியார் தி.க தலைவர். லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். தந்தைபிரியன்,விஜயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.மங்கையர் செல்வன்(மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்புத் தலைவர்), கோ.சுகுமாரன்(மக்கள் உரிமை கூட்டமைப்பு) ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
லோகு.அய்யப்பன் தனது தலைமையுரையில், ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்தும் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்தும், தமிழகத்தை ஒரு மாநிலமாக உள்ளடக்கிய இந்தியா, தமிழினத்திற்கு செய்யும் வரலாற்றுத் துரோகத்தையும் விளக்கிப் பேசினார்.

மேலும், இத்தாலி.சோனியாவின் காங்கிரஸ் கட்சியை மண்ணைக் கவ்வ செய்ய உணர்வாளர்கள் தீவிரக் களப்பணியாற்ற வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

கோவையில்

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் 07.04.2009 மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் வே.ஆறுச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம் , உடுமலை கருமலையப்பன், பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்ககுமார், ப.பிச்சுமணி , ச.மணிகண்டன் மற்றும் பல கழக தோழர்களும் தமிழுணர்வாளர்களும் , மாணவர்களும் திரளாக பங்கேற்றனர். PUCL பொன். சந்திரன், காந்தி கதர் கிராமம் மார்கண்டன் , CPI(ML) வழக்கறிஞர் முருகேசன் மற்றும் அபுபக்கர் ஆகியோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்குமான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஈழத்தமிழர்களின் துயரை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக நச்சுவாயுவினால் கொல்லப்பட்டது போல வேடம் அணிந்திருந்தனர். ஆர்ப்பாடாதில் பேசிய தோழர்கள், எந்தபோரிலும் நடந்திராத கொடுமைகள் ஈழத்தில் நடப்பதாகவும், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களை சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது பயன்படுத்தி இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் அந்த ஆயுதங்களை கொடுத்தது இந்திய அரசுதான் என தங்களின் கண்டன குரலெழுப்பினர்.

மேலும், இந்த எல்லா கொடுமைகளுக்கும் துணைபோகும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் அதை கண்டிக்காமல் இருக்கும் கருணாநிதிக்கும் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகள் வழியாக தகுந்த பதிலளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தோழர் கு. இராமகிருடிணன் தமது கண்டன உரையில், பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பொழுது உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தது அதனால் இஸ்ரேல் தமது ராணுவத்தை திரும்பப்பெற்றது, ஆனால், அப்பாவி தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் கண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் இந்தியா தான், இந்தப்போரில் தலையிட்டு அதை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் உலக நாடுகளை இந்திய தடுத்துவருகிறது என்றுக் கூறினார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு சீக்கியர்களுக்கு நடைபெற்ற கொடுமைக்கு காரணமான காங்கிரஸ் காரர் ஜகதீஷ் டைடலேரை அவ்வழக்கிலிருந்து விடுவித்தமை பற்றிய தமது கேள்விக்கு சரியான பதில் தராத இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது ஒரு சீக்கிய பத்திரிக்கையாளர் தமது பாதணியை வீசினார். அதுபோல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டிக்காமல் சிறிலங்கா அரசுடன் நட்பு பாராட்டும் காங்கிரஸ் காரர்கள் தமிழக மண்ணில் கால் வைத்தால் நம் செருப்புகள் கொண்டுதான் வரவேற்க வேண்டும். இனி இப்படி கூடிப்பேசி பயனில்லை, எல்லாதமிழர்களும் செயலில் ஈடுபடவேண்டும். ஒவ்வொரு தமிழனும் காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் எதிரான தத்தமது கண்டனத்தை வெளிப்படுத்தவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய காங்கிரஸ் அரசுக்கும், அதை பதவிக்காக ஆதரித்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கருணாநிதியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தூத்துக்குடியில்

நேற்றுக்காலை பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர்களும் , தமிழுணர்வாளர்களும் ஈழத்தமிழர்கள் மீது தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை போடுவதை தடுக்கக்கோரி மன்மோகன் சிங் கிற்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடாத்தினார்கள். இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்க தலைவர் தா.மி.பிரபு , வழக்கறிஞர்கள் இக்னேசியஸ் , பொன்ராசு மற்றும் திரளாக பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக மதிமுக வின் மாவட்டச்செயலாளர் வழக்குரைஞர் நக்கீரன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சிங்கள இந்திய அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான தமிழுணர்வாளர்கள் பங்கேற்றனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.