லண்டனில் 3வது நாளாக இன்றும் தமிழர்கள் போராட்டம்

லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ளது.

திங்கள்கிழமை பிற்பகல் முதல் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரமாண்டமான அளவில் முற்றுகை மறியல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்றப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் பலரை அப்புறப்படுத்த முயன்றபோது தமிழர்களுக்கும், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கும் இடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சிலரை போலீஸார் கைது செய்தனர்.

போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இதனால் போலீஸார் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தை பலனின்றி போய் விட்டது.

ஏராளமான தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இரவும் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் போக்குவரத்துக்கு மூடப்பட்டு விட்டது.

போராட்டம் குறித்து மெட்ரோபாலிடன் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தமிழர் பிரதிநிதிகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் அனுமதி பெறவில்லை. இது சட்டவிரோதம்.

இருப்பினும் பெருமளவில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாமல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயலுகிறோம் என்றார்.

போராட்டம் நடத்தி வருவோர் நகரின் பிற பகுதிகளுக்குப் பரவி பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் அவர்களைச் சுற்றி போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு உள்ள சதுக்கப் பகுதியில்தான் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.

இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே இருந்தபடி போராடி வரும் தமிழர்களில் பலர் சாலைகளுக்கு வர முயன்றபோது அவர்களை போலீஸார் கடும் சிரமத்திற்குப் பின்னர் மீண்டும் பழைய இடத்திற்குத் தள்ளி விட்டனர்.

ஆனாலும் மறுபடியும் மறுபடியும் தமிழர்கள் சாலைகளுக்கு வர முயற்சிப்பதும், போலீஸார் அவர்களை தடுத்து உள்ளே திருப்பவதும் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளது. இதில் சிலர் லேசான காயமடைந்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் வைத்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கக் கொடியை கைவிட வேண்டும். அது தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் கொடியை வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

புலிகள் இயக்கக் கொடியை வைத்திருந்த இருவரை போலீஸார் தீவிரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் கவலை..

இதற்கிடையே, இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதியில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை ராணுவம், பாதுகாப்பு வளையப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது கவலை தருகிறது. அப்பாவி மக்களின் நிலை மேலும் துயரத்திற்குள்ளாகியுள்ளதாக கருதுகிறேன்.

தற்போது உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். இது மிக மிக அவசியம் என்றார்.

எம்.பிக்கள் திரளுகிறார்கள்..

இதற்கிடையே, இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாகக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும் என இங்கிலாந்து எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து லீசஸ்டர் கிழக்கு எம்.பி. கீத் வாஸ் கூறுகையில், தொழிலாளர் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிககளைச் சேர்ந்த பெருமளவிலான எம்.பிக்கள் கையெழுத்திட்ட ஒரு கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கவுள்ளேன்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி இலங்கை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட வேண்டும். அங்கு அப்பாவிகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்றார் வாஸ்.

2 தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்..

இந்த நிலையில், போராட்டம் நடந்து வரும் பகுதியில், தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் பால பகுதியில் இவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீ மூன் அல்லது இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் தங்களை நேரில் சந்தித்து தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும், வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும், தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் போராட்டம் தொய்வின்றி தொடருவதால் இங்கிலாந்து அரசு நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.