வெடித்தது சீக்கியர்கள் போராட்டம்- பஞ்சாபில் பதட்டம்

சண்டிகர்: 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் நிரபராதி என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முழுவதும் சீக்கியர்கள் பெரும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டைட்லரைத் தண்டிக்க வேண்டும், அவரை நிரபராதி என கூறிய சிபிஐக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று சீக்கிய அமைப்புகள் உள்ளிட்டவை போராட்டங்களை நடத்தி வருகின்றன.

லூதியானா அருகே அமிர்தசரஸ் – டெல்லி சதாப்தி ரயிலை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஜலந்தர் அருகே உள்ளூர் ரயில் ஒன்றை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், டெல்லி- ஜம்மு இடையிலான மால்வா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

நேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது டைனிக் ஜாக்ரன் செய்தியாளர் ஜர்னைல் சிங் ஷூவை வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து பஞ்சாபில் சீக்கியர்களின் போராட்டம் வெடித்துள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், பியாஸ், பாட்டியாலா, சங்க்ரூர் நகரங்களில் பதட்டம் காணப்படுகிறது.

டைட்லர் விடுதலைக்கு பாதல் கண்டனம்

இதற்கிடையே பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் டைட்லரை நிரபாரதி என அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சீக்கியர்கள் இதுநாள் வரை பட்டு வந்த துயரங்களுக்கு மத்திய அரசும், காங்கிரஸும் மருந்து போடாததையே ஜர்னைல் சிங்கின் செயல் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வேதனையும், துயரமும் சீக்கிய சமூகத்துடன் நின்று விடவில்லை. மாறாக, உலகம் எங்கும் உள்ள நல்ல சிந்தனை உள்ள மக்களும் கூட இந்த வேதனையை உணர்ந்துள்ளனர்.

சீக்கியர்கள் மீதான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 25 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் டைட்லர் நிரபராதி என்று கூறி ஏற்கனவே புரையோடிக் கிடக்கும் புண்ணில் உப்பைத் தடவுவது போல உள்ளது.

பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங் எந்த அரசியல் அமைப்புடனும் தொடர்பு இல்லாதவர். தீவிரவாத கருத்துக்களுடன் கூடியவரும் கிடையாது. நன்கு படித்தவர். அப்படிப்பட்டவரே இப்படிக் கொந்தளித்துள்ளதைப் பார்க்கும்போது மற்ற சீக்கியர்களின் மன நிலையை எப்படிக் கூறுவது என்று தெரியவில்லை.

சீக்கியர்கள் மீதான தாக்குதல் குறித்து அமைக்கப்பட்ட அனைத்து விசாரணை அமைப்புகளும் ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குற்றவாளிகள் எனத்தான் கூறியுள்ளன. ஆனால் அவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு காங்கிரஸ் அரசு, இவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்காமல் தப்பிக்க வைக்க முயற்சிக்கிறது என்று கூறியிருந்தார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.