வருண் பற்றி பேச்சு: லாலு மீது வழக்குப் பதிவு

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய வருண் காந்தியை ரோடு ரோலர் ஏற்றிக் கொன்றிருப்பேன் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் பேசியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிஷென்கஞ்ச் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் லாலு மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிலிபிட் மக்களவைத் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரான வருண் காந்தி, தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தை வெளியிட்டதாக கூறப்பட்ட குற்றச்சாற்றின் கீழ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் தஸ்லிமுதீனை ஆதரித்துப் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் பேசினார்.

அப்போது, “தாம் உள்துறை அமைச்சராக இருந்தால் வருண் காந்தி மீது ரோடு ரோலர் (சாலை செப்பனிட பயன்படும் வாகனம்) ஏற்றி கொன்றிருப்பேன்” என ஆவேசமாகப் பேசியதாக கூறப்படுகிறது.

லாலு பிரசாத்தின் இப்பேச்சை பா.ஜனதா கடுமையாக கண்டித்ததுடன், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், லாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : in.tamil.yahoo.com

Leave a Reply

Your email address will not be published.