கிளிநொச்சிக்குள் ஊடுருவிய புலிகள் தற்கொலைத் தாக்குதல்

சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள, இராமநாதபுரம் பகுதியில் ஊடுருவிச் சென்ற விடுதலைப் புலிகள் அங்கு தற்கொலைத் தாக்குதலினை நேற்று நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இராமநாதபுரம் பகுதிக்கு ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைப் போராளி ஒருவரே நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பினர் தெரிவித்தனர்.

இப்பகுதிக்கு வந்த பெண் ஒருவர் மீது சந்தேகமடைந்த படையினர் அவரைத் தடுத்து நிறுத்தியபோதே அவர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அந்தப் பகுதியில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார். இருந்த போதிலும் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள படையினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் திட்டத்துடனேயே குறிப்பிட்ட இளம் பெண் வந்ததாகவும் இருந்தபோதிலும், படையினர் அந்தத் திட்டத்தை முறியடித்துவிட்டதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

வன்னிப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நிலப்பரப்பு சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்ட போதிலும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் ஊடுருவல் தாக்குதல்கள் படையினருக்குப் பெரும் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

கடந்த வார காலப்பகுதியில் விசுவமடுப் பகுதியில் ஊடுருவல் தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகள் ஓட்டுசுட்டான் பகுதியிலும் இது போன்ற தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர்.

ஒட்டுசுட்டான் பகுதியில் ஊடுருவிய விடுதலைப் புலிகள் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் கடந்த வாரம் 20 படையினர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : Puthinam.com

Leave a Reply

Your email address will not be published.