இத்தாலி பூகம்பத்தில் 90க்கும் அதிகமானோர் பலி

இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை தொண்ணூறுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும் குறைந்தது 1500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ரோமுக்கு வடகிழக்கே உள்ள பழங்கால நகரான ல அக்விலா நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அருகில் இருந்த பல மலைக் கிராமங்கள் சேதங்களுக்கு உள்ளாயின.

ல அக்விலா நகரில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தில் அழிந்து போயின. அதன் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நில நடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்காணவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த நகரத்தில் குழப்பமடைந்த மக்கள் தங்களது தனிப்பட்ட உடமைகளை பெட்டிகளில் எடுத்துக் கொண்டு கம்பளிகளை போர்த்தியவாறு செல்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது என்று ல அக்விலாவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.