வேட்பாளர்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப் போகிறார் விஜயகாந்த்: கு.ப.கி. ஆரூடம்

காஞ்சிபுரம்: லோக்சபா தேர்தலுக்குப் பின், மைத்துனர் சுதீஷ் தவிர மற்ற வேட்பாளர்களை விஜயகாந்த் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறார் என்று தேமுதிகவிலிருந்து தாவி மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் கு.ப.கி. பேசுகையில், சிவப்பு எம்ஜிஆரை பார்த்த நான், கருப்பு எம்ஜிஆர் என்று நினைத்து விஜயகாந்த் பக்கம் போனேன். ஆனால், நெருங்கியபோது தான் அவரது சுயரூபம் புரிந்தது.

பண்ருட்டி ராமச்சந்திரன், அவரது மைத்துனர் சுதீஸ் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி கூட்டணி பற்றி பேசினார் விஜயகாந்த்.

உடன்பாடு ஏற்படவில்லை என்றதால் தனித்து போட்டி என்று அறிவித்தார். அகில இந்திய கட்சிகளே கூட்டணி அமைக்கிறது. இவர் தனித்து போட்டியிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

வேட்பாளர் பட்டியலில் மைத்துனர் பெயரை வெளியிடுகிறார். சாதி, மதம் கடந்தவன் என்று பேசுகிறார். ஆனால், சாதிவாரியாக வேட்பாளர் நிறுத்துகிறார்.

தேமுதிகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. அதற்கு விளக்கம் தரவேண்டும்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த் மைத்துனர் தவிர மற்ற அனைத்து வேட்பாளரின் குடும்பங்களையும் தெருவில் நிறுத்தி விடுவார். தனித்து நின்றவர்கள் அனைவரும் தவிடுபொடியாகி விடுவார்கள் என்றார்.

Source & Thanks thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.