நியூசி-41 ஆண்டுகளுக்கு பின் தொடரை வென்ற இந்தியா

வெல்லிங்டன்: மழை குறுக்கிட்டதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-0 என வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து மூன்றாவது போட்டி வெல்லிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 379, நியூசிலாந்து 197 ரன்கள் எடுத்தன. 182 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 434 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 617 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து நான்காவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து, தோல்வியை தவிர்க்க போராடி வந்தது.

மழை வந்தது...

இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. சுழலில் கலக்கிய ஹர்பஜன், சச்சின் நியூசிலாந்து வீரர்களை வரிசையாக வெளியேற்றினர். சதம் கடந்த ரோஸ் டெய்லர் (107) மற்றும் ரைடர் (0) ஹர்பஜன் பந்திலும், பிராங்கிளின் (49), அதிரடி மெக்கலம் (6) ஆகியோர் சச்சின் பந்திலும் அவுட்டானார்கள்.

நியூசிலாந்து 94.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து திணறி கொண்டது. இந்நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மழையின் காரணமாக இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவியது.

இறுதியில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. இதன்மூலம் 41 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. முன்னதாக பட்டோடி தலைமையிலான இந்திய அணி 1968ல் டெஸ்ட் தொடரை 3-1 என வென்றிருந்தது.

Source & Thanks : /thatstamil.oneindia.

Leave a Reply

Your email address will not be published.