விதை நெல் பற்றாக்குறை- விவசாயிகள் முற்றுகை

விதை நெல் பற்றாக்குறை ஏற்பட்டதால், குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட மருவாய், பூதம்பாடி, கல்குணம், அரங்கமங்கலம், குருவப்பன் பேட்டை, எல்லப்பன் பேட்டை, வரதராஜன் பேட்டை, கொளக்குடி உள்ளிட்ட 53 கிராமங்களில் சுமார் 300 ஹெக்டேரில் குறுவை சாகுபடியும், நான்காயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடியும் செய்யப்படுகிறது.

விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய விதை நெல்லுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டார அலுவலகம் சார்பில் விதை விற்பனை தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து 200 க்கும் அதிகமான விவசாயிகள் திங்கள்கிழமை குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலகத்திற்கு, விதை நெல் வாங்க வந்தனர்.

இந்நிலையில் குறிஞ்சிப்பாடி வேளாண் அலுவலர், போதிய அளவு விதை நெல் கையிருப்பு இல்லாததால் அனைவருக்கும் விதை நெல் வழங்க இயலாது எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கடந்த ஆண்டு அனைவருக்கும் விதை நெல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எப்படி பற்றாக்குறை ஏற்பட்டது எனக் கேள்விக் கேட்டு, விதை நெல்லை பதுக்கி வைத்துக்கொண்டு, தனியாரை ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து விவசாயிகளை அழைத்து, இந்த ஆண்டு ஐ.ஆர்.50 ரக விதை நெல் 3.5 டன்னும், ஏடிடி ரக விதை 5.5 டன்னும் இருப்பு உள்ளது. விதைப் பண்ணைகளில் இருந்து போதிய விதை நெல் வரத்து இல்லாததால் பற்றாக்குறை நிலவுகிறது.

எனவே இருக்கின்ற விதை நெல்லை அனைவருக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்கிறோம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் சமரசம் ஏற்பட்டது. விவசாயிகள் விதை நெல்லை வாங்கி சென்றனர்.

விதை வாங்குவதில் இருந்து ஆரம்பிக்கும் விவசாயிகளின் துயரம், தானியங்களை விற்பனை செய்வது வரை தொடர்கிறது.

Source & Thanks : tamil.webdunia.

Leave a Reply

Your email address will not be published.