புதுச்சேரி கவர்னர் டில்லியில் மரணம்

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த்சிங் குர்ஜார், 1932 மார்ச் 9ம் தேதி பாலகானங்கல் கோட்புட்லி என்ற ஊரில் பிறந்தார். வக்கீலாக பணியாற்றி வந்தார்.


இவருக்கு கம்லேஸ் என்ற மனைவியும், ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிந்த்சிங் குர்ஜார், மூன்று முறை அமைச்சராக பணியாற்றி உள்ளார். பின், புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டு கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். தனது பிறந்த நாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக மார்ச் 7ம் தேதி புதுச்சேரியில் இருந்து ராஜஸ்தான் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கவர்னருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அவர், நேற்று அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு ராஜஸ்தானில் அஜ்மெர் நசிராபாத்தில் நடக்கிறது. கவர்னரின் மறைவையொட்டி ராஜ்நிவாஸ் மற்றும் புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான், கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கவர்னர் மறைவையொட்டி, புதுச்சேரியில் ஏழு நாட்களுக்கு அரசு சார்பில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.