கப்பலில் அதிக வேலை வாய்ப்புகள்: நரசய்யா தகவல்

சென்னை: “”கப்பலில் கேப்டன் பணிக்கும், இன்ஜினியர் பணிக்கும் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன,” என்று கடல்சார் துறையில் 30 ஆண்டுகால அனுபவம் பெற்ற நிபுணர் நரசய்யா கூறினார்.


பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு “அடுத்து என்ன படிக்கலாம்’ என்று வழிகாட்டுவதற்காக தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து, சென்னையில் வழிகாட்டி நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று நடந்த “வழிகாட்டி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “கடல்சார் படிப்புகள் படிப்பவர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்’ குறித்து இத்துறையில் 30 ஆண்டுகால அனுபவம் பெற்ற நிபுணர் நரசய்யா பேசியதாவது: இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கப்பல் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. கப்பல் கேப்டன் பணிகளுக்கும், இன்ஜினியர் பணிகளுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. கப்பல் துறை தொடர்பான படிப்பு அதிகமாக அறியப்படாமல் உள்ளது.

கப்பலில் கேப்டன், இன்ஜியர் பணிகளுக்கு சேர்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்றாலும், உலகத்திலேயே அதிக சம்பளம் இதில் தான் கிடைக்கிறது. உள்நாட்டில் அரசின் மூலமும், தனியார் கப்பல் நிறுவனங்கள் மூலமும், வெளிநாட்டிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மரைன் இன்ஜினியரிங், நாட்டிக்கல் சைன்ஸ் கோர்ஸ் படிக்க வேண்டும். “பிளஸ் 2′ வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் படிப்பு. உடல் தகுதி பரிசோனையும் உண்டு. கேப்டன் பணிக்கு மூன்று வருடம் கல்லூரியில் படிக்க வேண்டும். ஒரு வருடம் கப்பலில் பயிற்சியும் உண்டு. அதன் பிறகு தேர்வு எழுத வேண்டும். இன்ஜினியர் பணிக்கு நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படிக்க வேண்டும். ஒரு ஆண்டு கப்பலிலும் பயிற்சி முடித்து தேர்வு எழுத வேண்டும்.

இப்படிப்புக்கு ஐந்தரை லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். வங்கிகள் மூலமும் கல்வி கடன் பெறும் வசதியும் உள்ளது. ஏழு ஆண்டுகளில் கேப்டனாவும், தலைமை இன்ஜினியராகவும் ஆகிவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது. கேப்டன் மற்றும் தலைமை இன்ஜினியருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையும் சம்பளம் பெறக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பெண்கள் படிப்பதற்கு 50 சதவீதம் சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அடுத்த ஆண்டு கல்லூரி முடிக்க உள்ளவர்களுக்கு இந்த ஆண்டே நேர்முக தேர்வு மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் நிலையும் உள்ளது. இப்போது 100 மடங்கு வேலை வாய்ப்புகள் உள்ளது என்றால் 2015ல் இத்துறையில் 300 மடங்கு வேலை வாய்ப்புகள் உயரும். சென்னை, மதுரை, கோவை உட்பட இந்தியாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. அனைத்து கல்லூரிகளிலுமே தரமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆர்வத்துடனும், கடினமாகவும் உழைத்தால் இத்துறையில் உயர்ந்த இடத்திற்கு வரலாம். இவ்வாறு நரசய்யா பேசினார்.

நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரியாளர் நீலமேகம், “கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகள் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள்’ குறித்து பேசியதாவது: டாக்டருக்கு, இன்ஜினியருக்கு படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று மட்டுமே நினைக்க வேண்டாம். எல்லாத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. இப்படிப்புகள் படிக்க செலவும் குறைவு. மற்றவர்கள் விசாரிக்கும்போது, நாம் டாக்டருக்கு படிக்கவில்லை, இன்ஜினியருக்கு படிக்கவில்லை என்று அவர்களிடம் சொல்ல வேண்டிய நிலையாகிவிட்டதே என்று மாணவ, மாணவிகளுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது.

மற்றவர்களுக்காக படிப்பதை விட நமக்கு ஆர்வம் உள்ள கோர்ஸ்களை எடுத்து படித்தால் தான் நிறைவாக வெற்றியடைய முடியும். பி.காம்., படித்தால் எம்.காம்., – எம்.பில்., – பி.எச்டி., சி.ஏ., – ஏ.சி.எஸ்., – ஐ.சி.டபிள்யு.ஏ., படிக்கலாம். ஆடிட்டர் பணி செய்யலாம். கம்பெனிகளில் கணக்குப்பிரிவுகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பி.பி.ஏ., முடித்துவிட்டு எம்.பி.ஏ., படிக்கலாம் நிர்வாகத் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி., கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., – பி.எஸ்சி.,- ஐ.டி., முடித்தால் எம்.சி.ஏ., – எம்.எஸ்சி., -ஐ.டி., படிக்கலாம். கம்ப்யூட்டர் துறையில் புரோகிராமராகவும், கால் சென்டர் வேலை வாய்ப்புகளும், பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன், எம்.எஸ்சி., விஷசுவல் கம்யூனிகேஷன் படித்தால் திரைத் துறை, பத்திரிகைகளில் வேலை வாய்ப்பு பெறலாம். இவ்வாறு நீலமேகம் கூறினார். “வளமான வேலை வாய்ப்புகளை வழங்கும் பயோ-டெக் மற்றும் பயோ இன்ஜினியரிங்’ படிப்பு குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் நஸீரின், மாணவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

30 ஆயிரம் பேர் பங்கேற்ற வழிகாட்டி: தினமலர் நாளிதழ் சென்னையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் என 30 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கலந்துகொண்டனர். இதில் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களின் 83 ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைக் கேட்டறிந்தனர். கோர்ஸ் விவரங்கள் அடங்கிய பட்டியல்களையும் வாங்கிச் சென்றனர். கல்விக் கண்காட்சியில், 15க்கும் மேற்பட்ட கல்வி வல்லுனர்கள் பங்கேற்று மாணவர்கள் எந்தப் படிப்புகள் படித்தால் வேலை கிடைக்கும், படிப்பதற்கான செலவுகள், வங்கிக் கடன்கள் மற்றும் பல்வேறு படிப்புகள் பற்றிய முழு விவரங்களையும் எடுத்துக் கூறினர். மூன்று நாட்களிலும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். ஆர்.ஆர்.கேட்ரிங் மற்றும் சபோல் வட்டார் நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டன. சென்னை மாநகர போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.