அரசியல் தீர்வில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை: மனோ கணேசன்

தமிழ் மக்கள் இன்று அரசியல் தீர்வில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இந்த அரசாங்கத்திடம் இருந்து இன நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இந்தக் கருத்துக்களை மனோ கணேசன் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீமுடன் இணைந்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் முக்கியமாக தெரிவித்ததாவது:

அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதில்லை; இராணுவத் தீர்வு முனைப்புக்களை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புடன் இருக்கின்றது.

அரசியல் தீர்வைக் காண்பதற்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்த நிலையில் அதில் நாம் கலந்து கொண்டோம்.

ஆனால், அனைத்து கட்சிக்குழுவின் பரிந்துரைகளில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துலக கட்சிக்குழுவின் நிபுணர்கள் குழு தயாரித்தளித்த பெரும்பான்மை அறிக்கையைத் திறந்து பார்க்காமலேயே அவர் தூக்கி எறிந்தார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளைப் பகிரங்கப்படுத்துவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. பதிலாக இராணுவ நிகழ்ச்சி நிரலை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகின்றது.

இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்விலும் அரசாங்கத்திலும் நம்பிக்கை இழந்து விட்டனர். இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

அரசியல் தீர்வில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இருக்குமானால் முதலில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இதனை நான் அரசுக்கு ஒரு சவாலாகவே விடுக்கின்றேன்.

அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் 20 வருடங்களுக்கு முன்னரே நிராகரித்து விட்டனர். ஆனால், மாகாண சபைத் திட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு தயாராகவில்லை எனவும் மனோ கணேசன் இங்கு தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.