கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருந்து பலாத்காரமாகக் கொண்டு செல்லப்பட்ட மாணவர்கள்

யாழ். மாவட்டத்தில் உள்ள கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விடுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாமில் தமது பெற்றோர் சகிதம் வைக்கப்பட்டிருந்த 11 மாணவர்கள் சிறிலங்கா இராணுவத்தினால் பலவந்தமாக அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டிருப்பதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் தெல்லிப்பளையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை புகுந்த இராணுவத்தினரே இந்த மாணவர்களைக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு இன்று திங்கட்கிழமை கல்வித் திணைக்கள அதிகாரிகள் சென்ற போது இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலும் தென்மராட்சியிலும் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

படையினரால் பலாத்காரமாகக் கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் சிலர் நடைபெறவுள்ள க.பொ.த.உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சியில் உள்ள தடுப்பு முகாம்களில் உள்ள மாணவர்களும் இதேபோல சிறிலங்கா இராணுவத்தினரால் முன்னர் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.