வன்னி போர் நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதுவருக்கு சரத் பொன்சேகா விளக்கம்

வடகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கொழும்பில் உள்ள அமெரிக்காவின் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கிற்கு இன்று திங்கட்கிழமை நேரில் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு இன்று திங்கட்கிழமை காலை சென்ற அமெரிக்கத் தூதுவர், இராணுவத் தளபதியுடன் வன்னி போர் நிலைமைகள் தொடர்பாக விரிவான முறையில் பேச்சுக்களை நடத்தியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதி இராணுவத்தின் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாகவும், அடுத்த கட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் இராணுவத் தளபதி விரிவாக விளக்கியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

[படம்: சிறிலங்கா இராணுவ இணையத்தளம்]

[படம்: சிறிலங்கா இராணுவ இணையத்தளம்]

[படம்: சிறிலங்கா இராணுவ இணையத்தளம்]

இதனைவிட பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுடைய நிலை தொடர்பாகவும் விளக்கிய அவர், அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக படையினர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கியதாக தெரிகின்றது.

தொடரும் இந்த போரில் விடுதலைப் புலிகளின் இடைநிலை மட்டத்தில் உள்ள தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா, படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட உடலங்கள் இதனை உறுதிப்படுத்துவதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவருடன், அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புத்துறை ஆலோசகரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.