20,000 பேர் உடனடியாக இடம்பெயர்ந்து வவுனியா வருவர் என எதிர்பார்ப்பு

வீரகேசரி இணையம் 4/6/2009 3:58:59 PM – வன்னிப்பகுதியில் இருந்து மேலும் 20 ஆயிரம் பேர் உடனடியாக இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வருவார்கள் என அதிகாரிகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே 50 ஆயிரம் பேர் வவுனியாவுக்கு வந்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வருபவர்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு வருபவர்களுக்கான தங்குமிடம், அடிப்படை வசதிகள் என்பவற்றைச் செய்து கொடுப்பது தொடர்பாக இன்று வவுனியா செயலகத்தில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் கலந்து கொண்டார். இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் எல்.சி.பெரேராவும் இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைகள் எவை என்பது பற்றிய விபரங்களை அமைச்சர் வெளியிடவில்லை. எனினும், அந்தப் பாடசாலைகளில் மலசலகூடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களுக்கும் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். E-mail to a friend

Source & Thanks : virakesari

Leave a Reply

Your email address will not be published.