வரியை ஏய்க்க இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் 1.5 ட்ரில்லியன் டாலர்!

டெல்லி: உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் அளவுக்கு 1.5 ட்ரில்லியன் டாலர் அளவு பெரும் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் சமீபத்திய தேர்தல் அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் அளவு 1.5 டிரில்லியன் டாலர்கள் என கூறியிருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தப் பணம் முழுவதையும் மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவந்து, பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பேன் என பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்கே அத்வானி கூறியிருந்தார்.

இப்போது கிட்டத்தட்ட அதே விஷயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியர்கள் சிலர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு 1.4 ட்ரில்லியன் டாலர்கள் என்கிறது சிபிஎம்.

ஆனால் சமீபத்தில் கூடிய ஜி -20 மாநாட்டின் முடிவில்,உலகப் பொருளாதார வீழ்ச்சியைச் சீர்ப்படுத்த 1.1 ட்ரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்குவதாக உலகத் தலைவர்கள் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு, உலப் பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியைவிட 0.4 ட்ரில்லியன் டாலர் அதிகம்!!

உலகம் முழுக்க உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 11.5 ட்ரில்லியன் டாலர்கள் எனக் கணக்கிட்டுள்ளது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD). இதைக் குறிப்பிட்டுப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, ஸ்விஸ் வங்கியின் ரகசியக் கணக்கு ஆவணங்களை வெளிக் கொணருமாறு அமெரிக்கா உத்தரவிடட்டும். இந்தியாவும் அதேபோல செய்ய வேண்டும். காரணம் இந்தியர்களின் கறுப்புப் பணம் மட்டுமே உலக கறுப்புப் பணத்தில் 10 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது, என்றார்.

இதில் வேடிக்கை… இந்த கறுப்புப் பண விவகாரம் பற்றி காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கை, மேடை முழக்கம் எதிலுமே மூச்சு காட்டாததுதான்!

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.