நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாய்லர்கள் : என்.எல்.சி.,யில் முதன் முறையாக அறிமுகம்

நெய்வேலி : என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பகுதியில் முதன் முறையாக புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாய்லர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

என்.எல்.சி., நிறுவன சேர்மனாக அன்சாரி பொறுப்பேற்ற பிறகு இந்நிறுவன வளர்ச்சி விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்டுவரும் 2,490 மெகாவாட் இல்லாமல் கூடுதலாக 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரண்டு புதிய மின் உற்பத்தி யூனிட்டுகள் (2து 250 மெகாவாட்) 2,453 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய புதிய வகையான பாய்லர்கள் இந்த இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. எரியும் திறன் இந்த பாய்லர்களில் மிகவும் அதிகமாகும். அதாவது, பழுப்பு நிலக்கரி எரிக்கப்படும் போது சுற்றுச் சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுவதுடன், கரியில் உள்ள அனைத்து கார்பனும் எரிக்கப்பட்டு அதிகளவில் எரிதிறன் கிடைக்கும்.

இந்தியாவிலேயே இந்த வகையான (250 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது) பாய்லர்கள் வேறு எங்கும் இதுவரை பயன்படுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்த இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கம் 2050ம் ஆண்டு வரை மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். குறிப்பிட்ட இந்த அனல்மின் நிலையத்தின் வாயிலாக உற்பத்தி செய்யப்பட உள்ள 500 மெகாவாட் மின்சாரமும் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்பட உள்ளது.

அதாவது, இந்த புதிய அனல்மின் நிலையத்தின் வாயிலாக மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 20 லட்சம் யூனிட்டுகள் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தலை நிமிர்ந்திட குறைந்த செலவில் தரமான மின் உற்பத்தி தடையின்றி கிடைக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த சூழலில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரியின் ஆக்கப்பூர்வமான அதிரடி செயல்பாட்டினால் இந்நிறுவனத்தின் வாயிலாக தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வரும் 2,490 மெகாவாட் மின்சாரமும் சிக்கல் இல்லாமல் முழுமையாகக் கிடைப்பதுடன் வரும் ஆண்டின் துவக்கத்திலேயே கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைக்க உள்ளது ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

அன்சாரியின் அணுகுமுறை : என்.எல்.சி., பணியாளர்களிடம் உங்களால் முடியும் செய்யுங்கள், உங்களுடைய நியாயமான தேவைகளை உடனடியாக நிறைவேற்றுகிறேன் எனக் கூறி வரும் சேர்மன் அன்சாரி, திடீரென சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் அனல்மின் நிலைய பகுதிகளுக்குள் சென்று பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

உங்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா… இருந்தால் சொல்லுங்கள் உடனடியாக சரி செய்கிறேன் எனக் கூறினார். அதோடு மட்டுமின்றி, ஒரு சிலர் சொன்ன பிரச்னையையும் உடனடியாக சரி செய்து அசத்தினார். சேர்மன் அன்சாரியின் இந்த பாசிட்டிவான அணுகுமுறை என்.எல்.சி., பணியாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.