ஐ.டி., துறை மீண்டும் எழுச்சி பெறும்: ஹேமா கோபால் நம்பிக்கை

சென்னை : “”ஐ.டி., துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது. மீண்டும் அந்தத் துறையில் எழுச்சி ஏற்படும்,” என “வழிகாட்டி’ நிகழ்ச்சியில் ஹேமா கோபால் பேசினார். “வழிகாட்டி’ கருத்தரங்கில் “கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி., துறையில் தற்போதைய போக்கு’ என்ற தலைப்பில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் துணைத்தலைவர் ஹேமா கோபால் பேசியதாவது:


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்விக்குச் செல்லும்போது, பெற்றோர்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதா அல்லது தனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பதா என குழப்பமடையக் கூடாது. எந்தத் துறையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என நினைக்கிறீர்களோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்த துறையில் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு, அதில் உங்களது முழுத்திறமையையும் காட்ட வேண்டும்.

தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை சற்று பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால், 2010ம் ஆண்டுக்குள் மீண்டும் ஐ.டி., துறை எழுச்சி பெறும். ஆகையால், மாணவர்கள் தங்களது விருப்பமான “கம்ப்யூட்டர் சயின்ஸ்’ போன்ற ஐ.டி., துறை சார்ந்த படிப்புகளை தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். ஐ.டி., துறையில் சிறப்பாகச் செயல்பட, குழுவாகச் சேர்ந்து வேலை செய்தல்; ஆங்கில அறிவு, கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை அறிவு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்தத் துறையில் வேலையின் ஒரு பகுதியை நம் நாட்டில் செய்வோம். மீதமுள்ள மற்ற பகுதிகளை வெளிநாடுகளில் உள்ளவர்கள் பூர்த்தி செய்வர். ஆகையால், ஆங்கில அறிவு மிகவும் முக்கியம்.

நீங்கள் கிராமத்தில் படித்தவரா, நகரத்தில் படித்தவரா என்பதைப் பார்த்து உங்களுக்கு நிறுவனங்கள் வேலை தருவதில்லை. உங்களது திறமை எப்படியுள்ளது என்பதைப் பொறுத்தே வேலை வழங்குகின்றனர். நீங்கள் அதிக மார்க் பெற்றிருந்தாலும் கூட உங்கள் திறனை அவர்கள் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வேலை வழங்குகின்றனர். இவ்வாறு ஹேமா கோபால் பேசினார்.

பாராட்டு பெற்ற பார்வையற்ற மாணவி : “வழிகாட்டி’ கருத்தரங்கில் டி.சி.எஸ்., நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹேமா கோபால், மாணவர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, பார்வையற்ற மாணவி சரண்யா எழுந்து, “பிளஸ் 2 முடித்துள்ள என்னைப் போன்றோர் அடுத்து எந்தத் துறையை தேர்வு செய்வது சிறந்தது’ என்று கேட்டார்.

பார்வையற்ற மாணவியான சரண்யா தன்னம்பிக்கையோடு தனது எதிர்காலத்தை திட்டமிட, “வழிகாட்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்றதும், கருத்தரங்கில் பலர் முன்னிலையில் தனது கேள்வியை பதிவு செய்ததையும் ஹேமா கோபால் மற்றும் பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டினர்.

சரண்யாவின் கேள்விக்கு பதிலளித்த ஹேமா கோபால், “”உங்களைப் பாராட்டுகிறேன். கணிதவியல் மற்றும் சார்ட்டட் அக்கவுன்டன்ட் போன்ற படிப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பார்வை குறைபாடு உள்ள உங்களைப் போன்றோர் வெளிநாடுகளிலும் சென்று வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகளும் தற்போது உள்ளன. இதற்கென தனியாக வசதிகளும் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.

Source & Thanks ; dinamalar

Leave a Reply

Your email address will not be published.