புதுக்குடியிருப்பு முழுவதும் வீழ்ந்தது : புலிப்படை பெண் தலைவர் விதுஷா பலி

கொழும்பு : விடுதலைப் புலிகள் வசமிருந்த புதுக்குடியிருப்பு பகுதியை முழுமையாக கைப்பற்றியுள்ளதாகவும், இந்த சண்டையில் 420 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவம் கூறியதாவது:முல்லைத் தீவில் புலிகள் வசமிருந்த புதுக்குடியிருப்பு பகுதியின் பெரும்பாலான இடங்களை, ராணுவம் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. ஒரு சிறிய பகுதி மட்டுமே புலிகள் வசம் இருந்தது. இந்த பகுதியை ராணுவத்தினர் கைப்பற்றி விடாத அளவுக்கு, சமீப காலமாக புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.புலிகள் அமைப்பின் முன்னணி தலைவர்களே இந்த தாக்குதலை முன்னின்று நடத்தினர்.இருந்தாலும், ராணுவம் கடுமையாகப் போராடி, புலிகள் வசம் எஞ்சியிருந்த புதுக்குடியிருப்பின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டது. தற்போது, பாதுகாப்பு பகுதியென அறிவிக்கப்பட்ட இடத் திற்குள் புலிகள் பதுங்கியுள்ளனர். அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் அங்கு தான் உள்ளனர். 20 ச.கி.மீ., பரப்பளவுள்ள இந்த பகுதியில் பொதுமக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தி அவர்கள் மறைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக நடந்த சண்டையில், 420 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான தீபன், ரூபன், நாகேஷ், கடாபி (பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளர்), விதுஷா (மாலதி பெண்கள் படைப்பிரிவின் தலைவர்), துர்கா மற்றும் கமலினி ஆகியோரும் இந்த சண்டையில் உயிரிழந்தனர்.முன்னதாக, இங்கு நடந்த சண்டையில், குறிப்பிட்ட எண் ணிக்கையிலான புலிகள் பின் வாங்க முடியாமல் ராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டனர். இவர்களை சரணடையும் படி ராணுவம் கேட்டுக் கொண்டது. ஆனால், புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள், கடைசி வரை சண்டையிடும்படி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இங்கு சிக்கிக் கொண்ட புலிகளின் குடும்பத்தினர் பாதுகாப்பு பகுதியில் இருப்பதால், அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென நினைத்து இறுதி வரை சண்டையிட்டனர். இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு புலிகள் கோரிக்கை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், “டிவி’ சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவை எப்போதுமே நாங்கள் எதிரியாக நினைத்தது இல்லை. இந்திய நலனுக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. புலிகள் மீது இந்தியா கொண் டுள்ள நிலைப்பாடு வருத்தமளிப்பதாக உள்ளது. இந்திய அரசு எங்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சண்டையில் மட்டும் 20 ஆயிரம் இலங்கை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாங்களும் 4,000 வீரர்களை இழந்துள்ளோம். எங்கள் தலைவர் பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். போராட்டத்தை அவர் வழி நடத்துகிறார். இவ்வாறு நடேசன் கூறியுள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறுகையில், “இலங்கையில் நடக்கும் சண்டை காரணமாக ஏராளமான அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருகின்றனர். இதை தடுக்க, ஐ.நா., பொதுச் செயலரும், இலங்கை அதிபரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.