புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு வரும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: முல்லை. சுகாதார பணிப்பாளர்

புதுமாத்தளனில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் காயமடைந்தவர்கள் கப்பலின் மூலம் அழைத்துச் செல்லப்படுவதை தொடர்ந்து, புதுமாத்தளன் தற்காலிக வைத்தியசாலைக்கு வரும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே. தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாரிய காயங்களுக்குள்ளான 20 பேர் தனியாக நேற்றுக் காலை இந்த வைத்திய சாலைக்கு வந்தடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாத்தில் மாத்திரம் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி பாதுகாப்பு பிரதேசத்தினுள் 599 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் தொடர்பான முழுமையான விபரங்களை திரட்ட முடியாதிருப்பதாகவும், இறந்வர்களில் அதிகமானவர்களின் சடலங்கள் இதுவரையில் வைத்திசாலைக்கு எடுத்துவரப்படவில்லை எனவும் தெரிவித்த அவர் கடந்த மார்ச் மாத்தில் மாத்திரம் காயமடைந்த 3500 பேர் புதுமாத்தளன் தற்காலிக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த அளவில் காயமடைந்த பொது மக்கள் வரும் நிலையில் வைத்திய சேவை பணியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையும் நிலவுகிறது. கடந்த இரண்டு தினங்களைவிட நேற்று மிகவும் அதிகமான அளவு காயமடைந்தவர்கள் வைத்திய சாலைக்கு வந்துள்ளனர்.

அண்மையில் இந்த வைத்தியசாலையின் மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த நோயாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.

இதற்கிடையில் பொதுமக்களின் மருத்துவ நடவடிக்கைகளுக்கு 9 வகையான மருந்து பொருட்கள் மாத்திரமே இருக்கின்றன. இவை இங்கிருக்கும் 250,000 பேருக்கு போதுமானதாக இருக்காது.

இதேவேளை தமது பிள்ளைகளுக்கு பாலூட்ட முடியாத தாய்மார்கள், வைத்தியசாலையில் இருந்து பாலினை எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் வெவ்வேறு வகையான பாலினால் ஏற்படுகின்ற ஒவ்வாமை காரணமாக, வயிற்றோட்டத்திற்கு உள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே. தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.