வன்னியில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இராணுவத்தினை முன்நகர விடாது ஜனாதிபதி கட்டளையிட வேண்டும்: வீ்.ஆனந்தசங்கரி

வன்னியில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இராணுவத்தினை முன்நகர விடாது ஜனாதிபதி கட்டளையிட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ்.ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பொதுமக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையென ஜனாதிபதி உறுதியளித்திருப்பது தமக்கு மகிழ்சியளிக்கிறது. எனினும் அவர்களை பாதுகாப்பதுடன், அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் கடமையே.

மோதல் பிரதேசங்களில் தமது கட்டுப்பாட்டில் அதிகரித்த பொதுமக்கள் இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்து வருகின்றனர். இது போலியான பிரசாரம் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், அங்கு பொது மக்கள் இருக்கின்றமை உண்மையே.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் கடந்த 2007ம் ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையின் படி, கிளிநொச்சியில் 195,832 பேரும், முல்லைத்தீவில் 200,871 பேர் என மொத்தமாக 416,143 பேர் இருந்துள்ளனர்.

இந்த கணக்கில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்த 285,674 பேர் உள்ளடக்கப்படவில்லை. இந்த கணக்கெடுப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால் இரட்டிப்பாக்கப்பட்டிருப்பதாக கருதினாலும் இந்த எண்ணிக்கையானவர்களில் குறைந்தது 208,870 பேர் அங்கு இருந்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்த 50000 பேர் இடம்பெயர்ந்திருந்தால் இந்த பிரதேசத்தில் 258000 பேருக்கும் அதிகமானவர்கள் அந்த பிரதேசத்தில் இருந்திருப்பர்.

இதில், அரசாங்க பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி 50,000 பேர் வருகை தந்திருந்தால், 200,000 பேர் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் அங்கு இருப்பது 2 இலட்சம் பேராக இருந்தாலும், 40 ஆயிரம் பேராக இருந்தாலும், அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியர்களே.

இந்த மக்கள் அன்றாடம் எந்த இடத்தில் குண்டு விழும் என்ற அச்சத்துடன், மன நல நிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இதில் எந்த தரப்பின் தவறினால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது தர்க்கத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய விடயமில்லை. எந்த தரப்பினராலும், பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே முக்கியமாக கருதப்பட வேண்டிய விடயம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று கொழும்பில் தாக்குதல் நடத்திய போது, அங்குள்ள பொது மக்களும், ஜனாதிபதியான தாங்களும் எவ்வாறான அச்சத்துடன் வாழ்ந்தீர்கள் என்பது அறிந்த விடயமே. இதைவிட பயங்கரமான தாக்குதல்களுக்கு மத்தியில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் இராணுவத்தினை முன்நகர விடாது ஜனாதிபதி கட்டளையிட வேண்டும்

அத்துடன் பாதிக்கப்படுகின்ற பொது மக்களை விடுவிப்பதற்கு, ஐக்கிய நாடுகளை கொண்டு விடுதலைப் புலிகளை வலியுறுத்த வேண்டும்.

இதுவே அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே வழி. அத்துடன் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவிகளை பெற்று, பொதுமக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைய வேண்டும்” என கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.