இடம்பெயர்ந்த வன்னி மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் இணைந்து மகிந்த செயற்பட வேண்டும்: ரணில் கோரிக்கை

வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள பெரும் தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கருத்திற் கொண்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை கையாள்வதில் அரசாங்கம் ஐ.நா.வுடன் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் போருக்குள் சிக்குண்டு இடப்பெயர்வுப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர் எனக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இதன் விளைவாக பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என பல நாடுகள் கோரிக்கைகளை முன்வைத்து வருவதால் இந்தப் பிரச்சினை இப்போது அனைத்துலக விவகாரமாகியிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நாமும் சொல்கின்றோம். ஆனால், அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில்தான் இந்த மக்களின் உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக ஐ.நா.வுடன் இணைந்து செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்தையும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் தான் கேட்டுக்கொள்வதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.