குற்றச் செயல்களுக்காக கைதான துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சிறையில் இருந்து தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கடத்தல், கப்பம் கோரல், அச்சுறுத்தல், கொள்ளைகள் போன்றவற்றுடன் தொடர்பட்டமைக்காக கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ துணைக்குழுவைச் சேர்ந்த ஒருவர் இன்று யாழ். சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவிலேயே இவர் தப்பிச் சென்றதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இராணுவ துணைக்குழு ஒன்றைச் சேர்ந்த 28 வயதான வீரசிங்கம் சதீஸ்வரன் என்பவரே இன்று தப்பிச் சென்றிருக்கின்றார்.

இராணுவத்துடன் இணைந்து செயற்படும் குறிப்பிட்ட துணைக்குழுவின் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்ட இவர் பல கொள்ளைகள், கடத்தல்கள், கப்பம் கோரிய சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவை தொடர்பாக இவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவிருந்தார்.

இன்று அதிகாலை நீராடச் செல்வதாகக் கூறிச் சென்றவர் பின்னர் சிறைச்சாலையில் இருந்து காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.