ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் ஆளில்லா விமானங்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில், ஆளில்லா விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உச்சிப்புளியில் உள்ள கடற்படை தளத்தை கடற்படை விமான தளமாக தரம் உயர்த்தியுள்ளது கடற்படை. இந்த நிலையத்திற்கு ஐ.என்.எஸ். பருந்து என பெயர். மார்ச் 26ம் தேதி இது நிர்மானிக்கப்பட்டது.

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை உள்ளிட்ட பகுதிகளில் இந்த கடற்படை விமான தளம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

தற்போது இந்த கடற்படை விமான தளத்தில் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஐ.என்.எஸ். பருந்துடன் சேர்த்து தமிழகத்தில் தற்போது இரண்டு கடற்படை விமானதளங்கள் உள்ளன. இந்தியாவில் வேறு எங்குமே இப்படி இரு கடற்படை தளங்கள் எந்த மாநிலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது தளமான ஐ.என்.எஸ். ராஜாளி, அரக்கோணத்தில் 1992ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நிர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தின் சிறப்பம்சங்கள் ..

– உச்சிப்புளியில், இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட, பின்னர் கைவிடப்பட்ட 3000 அடி நீளமுடைய விமான தளத்தைத்தான் கடற்படை தன் வசம் எடுத்து அங்கு கடற்படைத் தளத்தை அமைத்தது. இலங்கைப் பிரச்சினையைத் தொடர்ந்து இங்கு 1982ம் ஆண்டு கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.

– ஆரம்பத்தில் இந்த தளத்திலிருந்து ஐலண்டர், டோர்னியர், சேட்டாக் ரக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

– 1997ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி இந்த கடற்படை தளம் ராஜாளி 2 என பெயர் மாற்றப்பட்டது.

– தற்போது இங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு முழுமையான ஒரு கடற்படை விமான தளமாக மாற்றப்பட்டு ஐ.என்.எஸ். பருந்து எனவும் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

– மிகப் பெரிய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்களை இப்போது இயக்க முடியும்.

– கப்பல்களில் இருக்கும் ஹெலிகாப்டர்களை இங்கிருந்தபடியே கட்டுப்படுத்தி, இயக்கும் வசதியும் இந்த நிலையத்திற்கு உண்டு.

– கடற்படையின் முதல் ஆளில்லா விமானங்களைக் கொண்ட படை (ஐஎன்ஏஎஸ் 342) கொச்சியில் 2006ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி தொடங்கப்பட்டது.

– கடற்படை தற்போது எம்.கே.2, ஹெரான் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை இரண்டும் இஸ்ரேலியத் தயாரிப்புகள் ஆகும்.

– மண்டபம் கேம்ப் ரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 15 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும் உச்சிப்புளி அமைந்துள்ளது.

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.