தமிழக அரசு அனுப்பிய உணவுப் பொருட்கள் வன்னிக்குப் போகவே இல்லை: ஐ.நா

சென்னை: தமிழக அரசு அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள் வன்னிப் பகுதிக்கு இதுவரை போகவே இல்லையாம். இலங்கை அரசு இந்த உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை அனுப்பவே இல்லை என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த உணவுப் பொருட்கள் என்ன ஆயின, எங்கே போயின என்று யாரிடமும் பதில் இல்லை.

இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் வி.சுரேஷ் கூறுகையில், இப்போது கூட இலங்கையில் தமிழர்கள் பட்டினிச் சாவை சந்தித்து வருகின்றனர்.

இடம் பெயர்ந்து அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் 1.9 லட்சம் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து உணவு உள்ளிட்டவை அனுப்பப்பட்டன. ஆனால் இவை இதுவரை அங்கு போய்ச் சேரவில்லை. அவை என்ன ஆயின, எங்கு போயின என்று கூட யாருக்கும் தெரியவில்லை.

இதை நாங்கள் சொல்லவில்லை, சமீபத்தில் உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்ததா என்பது குறித்து கணக்கெடுத்த இலங்கைக்கான ஐ.நா. மனிதாபிமான நடவடிகைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையே இதைக் கூறுகிறது.

தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில் இதுவரை 394 டன் உணவு மட்டுமே போய்ச் சேர்ந்துள்ளது. மற்றவை என்ன ஆயின என்று தெரியவில்லை. அங்கு மாதத்திற்கு 3000 டன் உணவுப் பொருள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களை வன்னிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டது இலங்கை அரசு. சமையல் எண்ணை உள்ளிட்ட எந்த அத்தியாவசியப் பொருட்களையும் அது அனுப்பக் கூடாது என தடை விதித்துள்ளது.

இதனால் அங்கு பட்டினிச் சாவுக்கு ஏராளமான பேர் பலியாகி வருகின்றனர். அவர்களின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கக் கூட யாரும் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இலங்கைக்கு மேலும் உணவு அனுப்பும் ஐ.நா:

இந் நிலையில் இலங்கையில் இடம் பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக மேலும் 1000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஐ.நா. உணவுத் திட்ட ஏஜென்சி கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை அரசு ஏற்பாடு செய்து கொடுத்த கப்பலில் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த உணவுப் பொருட்களை கொண்டு வருகிறது.

ஒரு லட்சம் பேருக்கு 20 நாட்களுக்கு இந்த உணவுப் பொருள் பயன்படும்.

பாதுகாப்பு வளையப் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாக ஐ.நா. உணவுத் திட்ட ஏஜென்சி கணக்கிட்டுள்ளது.

வன்னிப் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்ல இலங்கை அரசு தடை விதித்திருப்பதாலும், அந்த வழியாக போக சாத்தியம் இல்லாததாலும், கடல் மார்க்கமாக இதுவரை 2220 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஐ.நா. உணவுத் திட்ட ஏஜென்சி அனுப்பி வைத்துள்ளது.

தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் இன்னும் வன்னிக்குப் போய்ச் சேராத நிலையில் தற்போது ஐ.நா மேலும் ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை அனுப்பவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : /thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.