கும்பாபிஷேகம் நடக்கும் கோயிலில் குடிநீர் இல்லை

மதுரை: ஏப். 8ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக ரூ. 14 கோடி செலவில் திருப்பணிகள் நடந்துள்ளன. 5 ராஜகோபுரங்கள் உள்பட பல கோபுரங்களும் வண்ணம் தீட்டப்பட்டு, உடைந்த சுதைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.

கோயில் வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பொற்றாமரைக்குளமும் மாநகராட்சியால் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. ரூ. பல லட்சம் செலவில் யாகசாலை அமைக்கப் பட்டு நேற்று மாலை முதல் முதற்கால பூஜைகளும் துவங்கிவிட்டன.

கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோயிலில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள பள்ளிச் சிறுவர்கள் உட்பட பலரும் வருகின்றனர். ஆனால் கோயிலில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி சிறிதும் இல்லை என்பது வேதனைக்குரியது. கோயிலுக்குள் பல இடங்களில் அதற்கென குடிநீர் தொட்டி இருந்தாலும் பல பழுதாகியுள்ளன. வறுத்தெடுக்கும் கோடையில் தாகம் கொண்டவர்கள் அலைந்து திரிவது பரிதாபமாக உள்ளது. அவர்கள் வெளியில் சித்திரை வீதிக்கு வந்து ஓட்டல்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ரூ. பல கோடிகள் செலவிடும் அதிகாரிகள் பக்தர்களின் தாகம் தீர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாமா?

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.