தமிழக மீனவர்கள் 23 பேர் துப்பாக்கி முனையில் சிறை பிடிப்பு: சிங்கள கடற்படையினர் அட்டூழியம்

இராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 தமிழக மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் வந்த சிங்கள கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

இராமேசுவரத்தை சேர்ந்த மாரியப்பன், கருணாமூர்த்தி, உட்பட 23 மீனவர்கள் நேற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி 5 அதிநவீன படகுகளில் இலங்கை கடற்படையினர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி சுட்டபடி தமிழக மீனவர்களின் 6 படகுகளையும் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் 6 படகுகளுடன் சிறைபிடித்தனர்.

பின்னர் அவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 23 பேரும் ஊர்க்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க பட்டனர். அவர்கள் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து காவலில் வைத்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை நேற்று காலை இராமேசுவரத்துக்கு கரை திரும்பிய மற்ற மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன்துறை அதிகாரிகள் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு குறித்த 23 மீனவர்களையும் விடுவிப்பது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.