கொழும்புக்குள் 16 கரும்புலிகள்: விழிப்பாக இருக்குமாறு அமைச்சர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகள் 16 பேர் ஏற்கனவே கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச, இதனால் அமைச்சர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்திருக்கின்றார்.

நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போதே மகிந்த, அமைச்சர்கள் அனைவரையும் பார்த்து இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

எதிர்வரும் 25 ஆம் நாள் மேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்ற போதிலும், இந்தத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டங்கள் எதிலும் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு மகிந்த கட்டளையிட்டுள்ளார்.

பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதாலேயே இவ்வாறு தான் உத்தரவிடுவதாகவும் மகிந்த தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவினரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அமைச்சர்களின் நடமாட்டம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இரவு நேரத்தில் நடமாடுவதையும், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதனையும் அமைச்சர்கள் தவிர்த்துக்கொண்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளுடனான போரில் தமது படையினர் தற்போது இறுதிக்கட்டத்துக்குள் பிரவேசித்திருப்பதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்த மகிந்த, விடுதலைப் புலிகள் தற்போது ஒரு மிகவும் சிறிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளை சரணடையுமாறு படையினர் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்ற போதிலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் இதுவரையில் முன்வரவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.